தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் போயுள்ளவர்களை மீட்டுத்தரும்படியும் வேண்டியும், வவுனியா காளிகோவிலில் தேங்காய் உடைத்து நடத்தப்பட்ட பிரார்த்தனையின்போது உறவினர்கள் பலரும் கண்ணீர் விட்டு, கதறி அழுது வேண்டுதல் நடத்தினர்.
அனைத்துலக கைதிகள் தினத்தையொட்டி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனையின்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த முற்போக்கு சக்திகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள், விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப உறவினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும், சட்டத்துக்கு புறம்பாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறும் பல தடவைகளில் அரசாங்கத்திடம் நேரடியாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையிலும் சாதகமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை. இதற்காகப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளபோதிலும் அதற்கும் அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையிலேயே தேங்காய் உடைத்து காளியம்மனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சிறைச்சாலைகளில் விசாரரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய பலரும் வலியுறுத்தினர். இதன்பின்னர் தேங்காய்கள் உடைக்கப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை வழிபாடும் நடைபெற்றன.