அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது கடந்த ஆண்டு மே மாதம் 1-ந்தேதி அமெரிக்க படைகளால் சுட்டு கொல்லப்பட்டார். அபோதாபாத்தில் தங்கியிருந்த அவரை அமெரிக்க படைகள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி சுட்டுக்கொன்றனர்.
இதுதொடர்பாக `நோ ஈசி டே’ என்ற புத்தகத்தை ராணுவ அதிகாரி மாட்பிசோநட் எழுதியுள்ளார். பின்லேடனை வேட்டையாட சென்ற படையில் அவரும் சென்றிருந்தார்.
அந்த புத்தகத்தில் ஹெலிகாப்டர் எங்கிருந்து புறப்பட்டு அபோதாபாத்தை சென்றடைந்தது என்ற விவரத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலலாபாத்திலிருந்து புறப்பட்டு இந்தியா வழியாக பாகிஸ்தானின் கிழக்கு பகுதிக்குள் நுழைந்து அபோதாபாத் சென்றடைந்ததாக கூறியுள்ளார்.
இந்தியா வழியாக வெளிநாட்டு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதாக இருந்தால் அதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் பறக்கும் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தும்.
எனவே அமெரிக்கா முன்கூட்டியே இந்தியாவுக்கு தெரிவித்துவிட்டுதான், ஹெலிகாப்டர்களை இயக்கி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
எனவே பின்லேடனை வேட்டையாடபோவது முன்கூட்டியே இந்தியாவிற்கு தெரிந்திருக்கும் என்று கருத்து வெளியாகி உள்ளது. இதுபற்றி இந்தியா தரப்பில் கேட்டபோது இது அனுமானமான தகவல். இதற்கு பதில் சொல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.