LTTE தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வீடு அடையாளம் காணப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் மற்றுமொரு வீட்டை சிறீலங்கா படையினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனந்தபுரம் கிராமத்திற்குள் முற்றாக சேதமடைந்த நிலையிலுள்ள குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300 மீற்றர் தொடக்கம் 400 மீற்றர் வரையில் நிலத்திற்குக் கீழ் கொங்கிறீற்றால் அமைக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போரின்போது தலைவர் பிரபாகரன் இந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் அதன்பின்னர் விடுதலைப்புலிகளே அந்த வீட்டையும் பதுங்குழியையும் குண்டுவைத்து தகர்த்துவிட்டுச் சென்றதாகவும் தகவல் ஒன்று கூறுகிறது.

குண்டுவைத்து சிதைக்கப்பட்டுள்ள வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள பதுங்கு குழிக்கு செல்வதற்கான நுழைவாயில் அடைக்கப்பட்டுள்ளதால் உள்ளே என்ன இருக்கின்றதென்பதை சிறீலங்கா படையினர் கூட இன்னமும் பார்வையிடவில்லை என கூறப்படுகின்றது.

எனினும், இடையில் சிறீலங்கா படையினர் துளையிட்டு பார்த்தபோது உள்ளிருந்து துர்நாற்றம் வீசியதாகவும் அதனால் உள்ளே செல்லமுடியவில்லை எனவும் படையினர் கூறியுள்ளனர்.

தற்போது இந்தப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீட்டை சென்று பார்க்க முடிகின்றது. எனினும், உள்ளே சென்று பார்ப்பதற்கு மக்கள் இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.

TAGS: