ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள பன்னாட்டு படைகளின் மிக முக்கியத் தளங்களில் ஒன்றான ஹெல்மண்ட் மாநிலத்தின் கேம்ப் பாஸ்ச்சன் முகாமில் தாலிபான் ஆயுததாரிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் தொழில்முறையிலன்றி உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை இழிவுபடுத்தும் விதமான காணொளிக்கு பழிவாங்கும் விதமாக இத்தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த காணொளி தொடர்பில் பல நாடுகளில் வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.
நான்கு மணி நேரங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் துப்பாக்கிகள், மோர்டார் குண்டுகள், ரொக்கெட் எறிகுண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாலிபான்கள் கேம்ப் பாஸ்ச்சன் முகாமின் பாதுகாப்பு எல்லையைக் கடந்து ஊடுருவினர்.
இத்தாக்குதலில் அமெரிக்க மரைன்ஸ் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தாலிபான் தரப்பில் குறைந்தது பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலாளிகள் அனைவரையும் அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் தொடருவதாக நேட்டோ கூட்டணிப் படைகள் கூறுகின்றன.
பிரிட்டனின் முடிக்குரிவர்கள் வரிசையில் மூன்றாவது ஆளாக இருக்கும் இளவரசர் ஹரி அங்கு வானூர்தி விமானியாக இருப்பதாலேயே அந்த முகாம் இலக்கு வைக்கப்பட்டதாக தாலிபன்கள் கூறியுள்ளனர்.