இந்தோனிசியாவின் “34வது மாநிலத்துக்கு” உங்களை வரவேற்கிறோம்

– மரியாம் மொக்த்தார்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் ‘எம் திட்டத்தின்’ தொடர்ச்சியாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ‘என் திட்டம்’  இருக்கும் என்றால் மலேசியா சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் ( Tourism Malaysia ) ‘மலேசியா உண்மையிலேயே ஆசியா’ என்னும் அர்த்தமற்ற சுலோகத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ‘மலேசியா, உண்மையிலேயே இந்தோனிசியா’ என்னும் சுலோகம் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

முழு பூமிபுத்ரா உரிமைகளுடன் 3 மில்லியன் இந்தோனிசியர்கள் மலேசியக் குடிமக்களாகி விட்டனர் எனச் சொல்லப்படுவது உண்மையானால் மலேசியா ( சபா தவிர ) இந்தோனிசியாவின் 34வது மாநிலமாக விரைவில் அறியப்பட முடியும்.

பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு ஆயுதமேந்தி சண்டையிட வேண்டிய அவசியமே இல்லை.  இம்ஜின் ஆற்றுக்குக் குறுக்கே மனிதர்கள் அடுக்காக நடந்து சென்று எல்லையைக் கடந்தது போல அதுவும் இருக்கும்.

1999ம் ஆண்டு இந்தோனிசியா ஏழு புதிய மாநிலங்களை தோற்றுவித்தது. அதில் ஆச்சே மாநிலமும் ஒன்றாகும். அங்கு ஷரியா சட்டம் அமலில் உள்ளது. சிறப்பு தகுதியுடன் உருவாக்கப்பட்ட ஐந்து மாநிலங்களில் அதுவும் அடங்கும்.

இந்தோனிசியாவின் 34வது மாநிலம் சிறப்புத் தகுதியைக் கூட பெறக் கூடும். முன்னாள் சுதந்திர மலேசியா தனது குடிமக்களைப் புறக்கணித்து விட்டு இந்தோனிசியர்களை பெருமனதுடன் ஏற்றுக் கொண்டது அதற்குக் காரணமாக இருக்கலாம். அதே வேளையில் புறக்கணிக்கப்பட்ட மலேசியர்கள் புலம் பெயரக் கட்டாயப்படுத்தப்படலாம்.

அந்த சூழ்நிலை ஏற்படுமானால் ‘இந்தோனிசியாவுக்கான அடித்தளத்தை’ வகுத்த பொறுப்பு அம்னோவையே சாரும்.

ஒரு வேளை அம்னோ தலைவர்கள் மலேசிய மலாய்க்காரர்களை உபயோகமற்றவர்கள் எனக் கருதலாம்.  கடுமையாக உழைக்கக் கூடிய சட்டப்பூர்வ, சட்டவிரோத இந்தோனிசியத் தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆற்றிய பங்கிற்காக அவர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமையும் குடியுரிமையும் வெகுமதிகளாக கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் அதன் விளைவாக சாதாரண மலேசியர்கள் ஏமாற்றப்படுவதை அம்னோ தலைவர்கள்  மறந்து விட்டனர்.

இதில் அதிகமாக இழப்பை எதிர்நோக்கப் போவது மலேசிய மலாய்க்காரர்களே. கடின உழைப்பு, சுயமரியாதை ஏதுமின்றி பிச்சை போடப்படுவதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர்களை அம்னோ கடந்த பல தசாப்தங்களாக உருவாக்கி விட்டது.

கடுமையாக வேலை செய்யக் கூடிய இந்தோனிசியர்கள் மீது கவனம் செலுத்துவது நல்லது என அம்னோ தலைவர்கள் கருதலாம். அதனால்  ‘மலாய் அடையாளத் தன்மைக்கான’ அடிச்சுவடுகள் காணாமல் போய் விடும். மலாய் மேலாண்மை பட்டாளம் கூச்சல் போடுவதற்கு ஒன்றும் இருக்காது.

‘அசல்’ மலேசிய மலாய்க்காரர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் நன்மைகளை அல்லது சகாயங்களை இன்னும் அதிகமான மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். அரசாங்கத்திலும் சிவில் சேவையிலும் உள்ள மூத்த பதவிகளுக்குப் போட்டா போட்டி அதிகரிக்கும்.

இந்த விஷயத்தில் மசீசவும் மஇகாவும் ஏன் அமைதியாக இருக்கின்றன? மூன்று மில்லியன் இந்தோனிசியர்கள் (சபாவில் 1.7 மில்லியன் பிலிப்பினோக்கள்) இருப்பதாக கூறப்படும் போது அந்த எண்ணிக்கை 1.9 மில்லியன் மலேசிய இந்தியர்களைக் காட்டிலும் அதிகமானதாகும். இங்கு வாழும் இந்தியர்களில் பலருக்கு அவர்கள் மூன்றாவது தலைமுறை மலேசியர்களாக இருந்தாலும் மை கார்டு இல்லை, பிறப்புச் சான்றிதழ் கிடையாது.

இந்தோனிசியர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு வாழ்வாதாரத்தை தேடி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களக் கடந்து இங்கு வந்துள்ளனர்.

வருமானத்துக்காக அவர்கள் பல ஆண்டுகள் குடும்பங்களையும் மனைவிமார்களையும் விட்டு விட்டு இங்கு வாழ்கின்றனர்.

நிறைய கஷ்டங்கள் இருந்த போதிலும் பலர் அதனைச் சமாளித்து வெற்றி கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட மந்திரி புசாராகி விட்டார்.

இந்தோனிசியர்கள் எவ்வளவு கடுமையாக உழைக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்கு இரண்டு வீட்டுக்கு ஒரு வீட்டில் வேலை செய்யும் இந்தோனிசியப் பணிப் பெண்களைப் பார்த்தாலே போதும். இந்தோனிசியர்கள் நமக்குப் பரிமாறாத உணவு விடுதிகளே இந்த நாட்டில் இல்லை.

மளிகைக் கடைகளில் அல்லது சந்தைக் கூடங்களில் இந்தோனிசியர்கள் நிறையக் காணப்படுகின்றனர்.
கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள், தோட்டங்கள், பெட்ரோல் நிலையங்கள் எல்லாம் இந்தோனிசியர்களுடய ஆதிக்கம் அதிகம். அவர்கள் இல்லாவிட்டால் நம்மால் என்ன செய்ய முடியும்?

அந்த வேலைகள் நமது அந்தஸ்துக்கு குறைந்தவை என்பதால் நம் அந்த வேலைகளை நிராகரிக்கிறோம். இருந்தும் நாம் இந்தோனிசியர்களைத் தரக்குறைவாக நினைக்கிறோம்.

இன உணர்வு இல்லை

238 மில்லியன் மக்கள் வாழும் இந்தோனிசியாவில் சமய சகிப்புத்தன்மை மீறப்பட்ட சம்பவங்கள் மிகக் குறைவு என அந்த நாட்டில் வாழுகின்ற மலேசியர்களும் மேற்கத்தியர்களும் கூறுகின்றனர். எல்லா நாட்டிலும் அத்தகைய சம்பவங்கள் நிகழ்வது உண்மைதான்.

பல இந்தோனிசியர்கள் தீவிரத் தேசியவாதிகள் என்றாலும் அவர்கள் தங்களது இனம், சமயம், இன வம்சாவளிக்கு மேலாக தங்களை முதலில் இந்தோனிசியர்களாகத்தான் கருதுகின்றனர். நம்மைப் போன்று இந்தோனிசியர்களும் அவர்களுடைய ஊடகங்களும் இன உணர்வில் முழுகிப் போகவில்லை.

அன்றாட வாழ்க்கையில் ஹாலால் அல்லாத கடை ஒன்றில் இந்தோனிசிய முஸ்லிம் காப்பி  அருந்தும்போது பக்கத்தில் அவருடைய சக நாட்டவரான முஸ்லிம் அல்லாத ஒருவர் பீயரை அருந்திக் கொண்டிருப்பார். ஒரு கடையில் பன்றி இறைச்சியோ அல்லது ஹாலால் அல்லாத பொருட்களோ விற்கப்படுவது குறித்து முணுமுணுப்பதில்லை. பன்றி இறைச்சியும் மதுபானமும் விற்கப்படும் கடைகளில் முஸ்லிம்கள் வேலை செய்கின்றனர்.

மலேசியாவில் முஸ்லிம் ஊழியர் ஒருவர் பிளாஸ்டிக் பையைக் கொண்டு பன்றி இறைச்சி டின் ஒன்றை எடுத்து அதனை பின்னர் குப்பைக் கூடையில் போட்டு விட்டதை என் நண்பர் ஒருவர் பார்த்திருக்கிறார்.

ஆனால் அதே முஸ்லிம்கள் ஐரோப்பாவுக்கு, அமெரிக்காவுக்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் போது ஹாலால் பொருட்களையும் ஹாலால் அல்லாத பொருட்களை அருகருகே வைத்துக் கொண்டு விற்பனை செய்யும் ஒரு கடையிலிருந்து உணவுப் பொருட்களை வாங்குவது பற்றி தாங்கள் கவலைப்படுவது இல்லை என தெரிவித்துள்ளனர். மலேசிய மலாய்/முஸ்லிம்கள் இரட்டை வேடம் போடுகின்றவர்களா அல்லது நமது மலாய் சமயத் தலைவர்கள் நம்மைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக உருவாக்கிய பண்பாடா?

மலேசியாவில் நிலைமை மோசமடைந்து வருகிறது. ஒரின உணர்வுள்ள முஸ்லிம் ஆண்கள் பலர் தங்களது கூட்டாளிகளுடன் வாழ்வதற்காக தாராளப் போக்குடைய இந்தோனிசியாவுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்.

மகாதீர், தமது ஆட்சிக் காலத்தின் போது தாமும் தமது அடிவருடிகளும் நாட்டைத் தொடர்ந்து ஆள வேண்டுமானால் சபா மக்கள தொகை அமைப்பையே மாற்றி அதனைத் தொடர்ந்து நாட்டின் வாக்காளர் வாக்களிப்பு முறையையே திருத்துவதே ஒரே வழி என உணர்ந்திருக்க வேண்டும்.

1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தேர்தலில் தோல்வி காண நேரிடும் என்னும் அச்சத்தினால் “எம்திட்டம்” என அழைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் “அடையாளக் கார்டு திட்டத்திற்கு” மகாதீர் தலைமை தாங்கினார். அப்போது நூறாயிரக்கணக்கான பிலிப்பினோ சட்ட விர்ரொதக் குடியேற்றக்காரர்கள் குடிமக்களாக்கப்பட்டனர்.

பிஎன் ஆவி வாக்காளர்களுடன் பெரிய சமூகப் பிரச்னையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு வெற்றியை உறுதி செய்தது.

அம்னோ தலைவர்கள் சட்ட விரோதக் குடியேற்றம் பற்றி இன்னும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

2006ம் ஆண்டு ஜோகூரில் 17.7 பில்லியன் ரிங்கிட் பெறும் இஸ்காண்டார் மலேசியா திட்டம் மகாதீர் ஆத்திரமடைந்ததுதான் இதில் வினோதமானது.

“நிலம் விற்கப்பட்ட பின்னர் மலாய்க்காரர்கள் காட்டின் விளிம்புக்கு அல்லது காட்டுக்குள்ளேயே வாழ்க்கை நடத்துவதற்குத் துரத்தப்பட்டு விடுவார்கள். இறுதியில் இஸ்காண்டார் மலேசியாவை சிங்கப்பூரர்கள் நிரப்பி விடுவர். மலாய்க்காரர்கள் 15 விழுக்காடு மட்டுமே இருப்பார்கள்,” என அவர் சொன்னார்

இந்தோனிசியக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்குவதின் மூலம் தாம் சரியானதைச் செய்து கொண்டிருப்பதாக நஜிப் நினைக்கிறார்.

ஆனால் சுஹார்த்தோவின் சர்வாதிகார ஆட்சியில் பல இந்தோனிசியர்கள் துயரமான வாழ்க்கையை அனுபவித்துள்ளனர் என்பதை அவர் மறந்து விட்டார். 1990ம் ஆண்டுகளில் இந்தோனிசிய சமூகமும் பொருளாதாரமும் சூறையாடப்பட்டதை அந்த இந்தோனிசியர்கள் என்றும் நினைவில் வைத்திருப்பர்.

சுஹார்த்தோ தமது உறவினர்களையும் சேவகர்களையும் கொண்டு நாடாளுமன்றத்தையும்  அமைச்சரவையையும் நிரப்பியதை அவர்கள் நினைவு கூர முடியும். அதன் விளைவாக பல அரசியல்வாதிகளும் இளைஞர்களும் குறிப்பாக மாணவர்களும் சர்வாதிகார ஆட்சி, ஊழல், நண்பர்களுக்கு உதவுவது போன்றவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர்.

யாருக்குத் தெரியும்? நஜிப் புதிதாக உருவாக்கியுள்ள மலேசியர்கள் இந்தோனிசியாவில் உள்ள அரசியல், ஜனநாயகச் சிந்தனைகளைக் கொண்ட தங்களது சகாக்கள் ஒரு காலத்தில் செய்ததைப் போல சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களை இங்கு வழி நடத்தக் கூடும்.