அடுத்த பொதுத் தேர்தல் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்காளர்களுக்கு நட்புறவான 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 55 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்து வரும் அவரது பாரிசான் நேசனல் அடுத்த ஜுன் மாதத்திற்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும். பொதுக் கடன்களை கட்டுப்படுத்துமாறு மதிப்பீட்டு நிறுவனங்கள் தொடுக்கும் அழுத்தத்தையும் அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.
ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமூட்டவும் அரசியல் ஆதரவை வலுப்படுத்தவும் நேரடியான ரொக்க அன்பளிப்புக்கள், வரிக் குறைப்புக்கள், 1.3 மில்லியனாக இருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு ஒன்றரை மாத போனஸ் ஆகியவற்றுக்காக 3.0 பில்லியன் ரிங்கிட் உட்பட பல செலவுகளை நஜிப் அறிவித்தார்.
மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இவ்வாண்டு வழங்கப்பட்ட 500 ரிங்கிட் தொகையை அரசாங்கம் அடுத்த ஆண்டும் வழங்கும் என அவர் நாடாளுமன்றத்தில் கூறினார். 2,000 ரிங்கிட் அல்லது அதற்குக் குறைவாக மாதம் ஒன்றுக்கு வருமானத்தைக் கொண்டுள்ள திருமணமாகாத 21 வயதுக்கும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு 250 ரிங்கிட் கொடுக்கப்படும்.
பொருளாதாரத்துக்கு ஊக்கமூட்டுவதற்காக பல நடவடிக்கைகளையும் பிரதமர் தமது பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இது அடுத்த தேர்தலுக்கு முந்திய அவரது கடைசி வரவு செலவுத் திட்டமாகும்.
அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மூன்று கட்சிகளைக் கொண்ட பக்கத்தான் ராக்யாட் கூட்டணியின் கடும் எதிர்ப்பை பிரதமர் எதிர்நோக்குகிறார்.
நிதி அமைச்சருமான அவர், ஆண்டு ஒன்றுக்கு 50,000 ரிங்கிட் வரையில் வரி விதிக்கக் கூடிய வருமானத்தைப் பெறுகின்றவர்களுக்கான தனி நபர் வருமான வரியை ஒரு விழுக்காடு குறைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
நீடித்த பசுமைத் திட்டங்களுக்கு உதவியாக 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
“மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, நிலையான வளர்ச்சி, விவேகமாகச் செலவு செய்வது, வரவு செலவுப் பற்றாக்குறையைக் குறைப்பது ஆகியவை மீது 2013 வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும். மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பதே தலையாய நோக்கம்,” என்றார் அவர்.
என்றாலும் அரசாங்கச் செலவுகளைக் குறைப்பதற்காக சீனி உதவித் தொகை ஒரளவு குறைக்கப்படும் என்று கூறிய நஜிப் அரசாங்க கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காட்டைத் தாண்டாது என்று உறுதி அளித்தார்.
தென் கிழக்காசியாவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமான மலேசியா மீது நிதி நெருக்குதல்கள் அதிகரித்து வருவதால் அதன் கடன் மதிப்பீடுகள் கீழே விழக் கூடும் என Standard & Poor’s மற்றும் Fitch மதிப்பீட்டு நிறுவனங்கள் அண்மையில் எச்சரித்தன.
குறைவான நிதிப் பற்றாக்குறை
இவ்வாண்டு வரவு செலவுப் பற்றாக்குறை 4.5 விழுக்காடாக இருக்கும் என கருவூலம் மதிப்பிட்டுள்ளது.
அதே வேளையில் பொதுக் கடன் அளவு இவ்வாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53.7 விழுக்காட்டை எட்டியது.
என்றாலும் கூடுதல் வருமானத்தைப் பெறுவதின் மூலமும் குறைவாகச் செலவு செய்வதின் மூலமும் அடுத்த ஆண்டு வரவு செலவுப் பற்றாக்குறையை நான்கு விழுக்காட்டுக்குக் குறைக்க அரசாங்கம் எண்ணியுள்ளது. 2015ம் ஆண்டு வாக்கில் அந்த பற்றாக்குறையை மூன்று விழுக்காடாக குறைக்கவும் அது உறுதி பூண்டுள்ளது.
2013ம் ஆண்டு பொருளாதாரம் 4.5 விழுக்காடு முதல் 5.5 விழுக்காடு வரையில் வளர்ச்சி காணும் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. 2012ல் அது ஐந்து விழுக்காடாக இருக்கும் என ஆரூடம் கூறப்பட்டது.
இந்த ஆண்டு இரண்டாவது கால் பகுதியில் ஏற்றுமதிகள் வீழ்ச்சி கண்ட போதிலும் பொருளாதாரம் 5.4 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா எதிர்நோக்கும் கடன் பிரச்னைகளினால் அங்கு தேவைகள் குறைகின்றன.
2011-ல் மலேசியா 5.1 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தது.
2009ம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த நஜிப்புக்கு இந்த வரவு செலவுத் திட்டம் தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் சமர்பிக்கும் கடைசி பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்கதாக இல்லாத எதிர்க்கட்சிகள் 2008ம் ஆண்டு தேர்தலில் எதிர்பாராத வெற்றிகளை அடைந்தன. ஆளும் பாரிசான் நேசனல் நாடாளுமன்றத்தில் தனது பாரம்பரிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியது. வாக்காளர்களை மீண்டும் கவரும் நோக்கத்துடன் நஜிப் பிரதமர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
என்றாலும் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த தேர்தல் சீர்திருத்தப் பேரணியில் பத்தாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதைத் தொடர்ந்து நஜிப்பின் செல்வாக்கு ஐந்து விழுக்காடு சரிந்துள்ளது.
நாடு 1957ல் சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மலேசியாவை ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி ஆட்சி புரிந்து வருகின்றது.
ஆனால் ஊழல், பொருளாதாரக் கவலைகள், சர்வாதிகார ஆட்சி என்ற குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கூட்டணி பயன்படுத்திக் கொண்டு வருகின்றது.
-ஏஎப்பி