போரின் இறுதி முடிவு ௭ன்னவாக இருக்கப்போகிறது ௭ன்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் ௭ன்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு ௭ன்றே தாம் கருதுவதாக, இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக எரிக் சொல்ஹேய்ம் பிபிசியிடம் கூறியுள்ளார்.
“2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினால் எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. அதன்பின்னர் எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை” என எரிக் சொல்ஹேய்ம் கூறினார்.
அதேசமயம், இதை காரணமாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்தமுடியாது. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தமுடியா ‘பாதுகாப்பு வலயம்’ என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன என அவர் மேலும் சொன்னார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக இந்திய அரசில் கொஞ்சம் கூட அனுதாபம் இருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள் இதற்கு பின்னணியில் இருக்கின்றன. ஆனால் அதேசமயம் போரின் இறுதி கட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படக்கூடாது ௭ன்பது குறித்து இந்திய தரப்பில் கரிசனை காணப்பட்டது என நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான ௭ரிக் சொல்ஹெய்ம் கூறினார்.
இலங்கை பிரச்னையில் தாம் ஈடுபட்டிருந்த 10 ஆண்டுளில் இந்தியாவுக்கு தெரிவிக்காமல் ௭ந்த திட்டத்தையும் முன்னெடுத்ததில்லை என கூறிய அவர், இந்த திட்டத்தை இந்தியா ஏற்றிருக்கும் ௭ன்பதிலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் ௭ன்பதிலும் தனக்கு ௭ந்தவித சந்தேகமும் இல்லையென தெரிவித்துள்ளார்.