கே.பி மீது எந்த வழக்கும் இல்லை என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது உயிருடன் இருப்பவர்களில் மூத்த தலைவரான கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் மீது தற்போது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் அவர் மீது இனிமேல் எந்த குற்றச்சாட்டுக்களையும் பதியும் எண்ணம் இலங்கை அரசுக்கு இல்லை என்றும் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் தலைவர் லக்ஷ்மண் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு கடுமையான சண்டையிடலுடன் முடிவுக்கு வந்தபோது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த பின்னணியில் பத்மனாதன் தொடர்ந்தும் அரசின் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா என்று கேட்டபோது, இன்றைய நிலையில் அவர் எந்தவித காவலிலும் இல்லை என்றார் ஹுலுகல்ல.

அதேசமயம், இண்டர்போல் எனப்படும் பன்னாட்டு புலனாய்வு காவல்துறை அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் கேபி எனப்படும் பத்மநாதன் பெயர் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத குற்றங்கள், மற்றும் ஆயுதங்கள், வெடிபொருட்களை கொண்டு செய்த குற்றச்செயல்கள் தொடர்பில் இந்தியாவினால் அவர் தேடப்பட்டுவருவதாக இண்டர்போல் அமைப்பு கூறுகிறது.

இலங்கை அரசின் இன்றைய அறிவிப்பை பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தபோது வெளிநாட்டில் இருந்த பத்மநாதன் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று கூறுயிருக்கிறார் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பேசவல்ல அதிகாரியான ஜெயலத் ஜெயவர்த்தன.

கேபி-யின் மர்மப் பின்னணி

2009-ஆம் ஆண்டு மே மாதம் அளவில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேபி எனப்படும் பத்மநாதன் மர்மமான முறையில் இலங்கைக்கு திரும்பினார்.

இலங்கையின் புலனாய்வு அமைப்பின் தலையீட்டின் பேரில், அவர் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், சட்டவிரோதமான முறையில் அவர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அப்போது வெளிவந்த செய்திகள் தெரிவித்தன.

அப்போது இலங்கையின் அரச தொலைக்காட்சியில் அவர் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், சதிசெய்ததாகவும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நிதி திரட்டியதாகவும் கூறப்பட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கான ஆயுத கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளுக்கு அவர் தலைமை தாங்கிச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேபி தற்போது எங்கிருக்கிறார்?

இதுநாள் வரை அவர் தடுப்புக்காவலில் இருப்பதாகவே அரச தரப்பில் கூறப்பட்டு வந்தது. அதேசமயம் அவர் இலங்கையின் வடபிராந்தியத்தில் செயற்படும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததோடு, அதற்காக அவர் அடிக்கடி வட மாநிலத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டும் வந்தார்.

தற்போது பத்மநாதன் எங்கிருக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. ஆனால் அவர் விடுதலைப் புலிகளின் தலைமையகமாக செயல்பட்ட கிளிநொச்சியில் இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது இலங்கை அரசுக்கு வெற்றி என்கிறார் ஹுலுகல்ல. ஒரு காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழர்களுக்காகவும் இருந்தவர், இன்று இலங்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சிகாக உழைப்பதாக தெரிவித்த ஹுலுகல்ல, அதை செய்வதற்கு அவருக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் அதிகார மட்டத்தில் மிகவும் சிறிய பதவிகளை வகித்த பலர் இன்னமும் வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில், அந்த அமைப்பின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் சுதந்திரமாக நடமாட முடிந்தது எப்படி என்று பிபிசி சார்பில் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, பத்மநாதன் மீது எந்தவிதமான சட்ட ரீதியான புகாரும் இல்லாததால் அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று தெரிவித்தார்.

TAGS: