இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் அடுத்த மாதம் நடக்க இருந்தது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் உளளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க தயாராகினர். இந்த இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் சென்னையில் நடந்து வந்தன.
எனினும், இந்த இசை நிகழ்ச்சிக்கு கனடாவில் உள்ள தமிழர்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாக ஈழத்தமிழர்கள் கடைபிடிப்பதால் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து இசை நிகழ்ச்சி ரத்தாகும் என தெரிகிறது.
தமிழீழ விடுதலை போராட்டத்தில் நவம்பர் மாதம் புனிதமான மாதம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எழுச்சி கொள்ளும் மாதம். நவம்பர் 27 தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக அனுஷ்டிக்கப்படும் எழுச்சி நாள் என கனடாவில் உள்ள தமிழர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுவதாகவும் அதற்குரிய உடன்பாட்டை இளையராஜாவிடம் இருந்து பெறப்போவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.