அரசியலில் நுழையும் எண்ணம் தற்போதைக்கு இல்லை: கே.பி

இலங்கை அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும், தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவருமான குமரன் பத்மநாதன் (கேபி) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் – அரியாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் ஆதரவுடன் நெர்டோ எனும் அமைப்பு வழிநடத்திச்செல்லும் கேபி, தமது அரசியல் ஈடுபாடு குறித்து இன்னும் தான் தீர்மானிக்கவில்லை எனவும் அதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சர்வதேசத்தின் செயற்பாடுகளால் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

2009-ம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு யார் தலைமை தாங்குவது தொடர்பில் சர்வதேசத்தில் ஏற்பட்ட பிரச்னையில் கே.பி, இலங்கை அரசாங்கத்தின் பிடியில் சிக்கியதாக அல்லது சிங்கள அரசுடன் இணைந்ததாக கூறப்பட்டது.

TAGS: