இலங்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகவுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டுவந்துள்ள பதவிநீக்க கண்டன தீர்மானம் திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பில் நடந்துள்ளது.
ஜனநாயகத்தைக் காக்கும் மக்கள் அமைப்பின் உறுப்பினர்களும் சட்டத்தரணிகளுமாக நூற்றுக்கணக்கானோர் கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து கோட்டை ரயில் நிலையம் வரையில் ஊர்வலம் சென்றுள்ளனர்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எதிரான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரிப்பார்கள் என்று அரசாங்கம் கூறுவதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மக்களுக்கான சட்டத்தரணிகள் சங்கம் என்ற அமைப்பின் தலைவர் சுனில் வட்டகல கூறினார்.
ஜனாதிபதி ராஜபக்சேவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக அமையக்கூடிய சில தீர்ப்புகளை வழங்கியமைக்காக பொய்யான குற்றச்சாட்டுகளுடன் ஷிரானி பண்டாரநாயக மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்கள் பலவற்றில் இதுவும் ஒன்று என்று அவர் குற்றம்சாட்டினார். ஆர்ப்பாட்டத்தினை முன்னிட்டு ஊர்வலம் சென்ற பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

























