இலங்கையில் மாகாண சபைகளை ரத்துச் செய்ய வேண்டும் என்று ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் இருவர் குரல் எழுப்பியுள்ளார்கள்.
நாட்டின் அபிவிருத்திக்கு மாகாண சபைகள் முறைமை தடையாக இருப்பதாகக் கூறி, அதனை ரத்துச் செய்ய வேண்டும் என்று அந்த இரு அமைச்சர்களும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளனர்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆகியோர் இந்தக் கருத்தை முன்வைத்தனர்.
மாகாண சபைகளின் மூலம் நாடு கூட்டாட்சி முறைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவாக்க அங்கு கூறினார்.
மாகாண சபைகளின் காரணமாக நாடாளுமன்றத்தின் அதிகாரம் நாளுக்கு நாள் பலவீனமடைந்துவருவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறினார்.
எதிர்காலத்தில் வடக்கு மாகாண சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் சென்றால், அது அரசாங்கம் கொண்டுவரும் சட்டங்களுக்கு தடையாக அமைய முடியும் என்றும் அவர் கூறினார்.
அந்த மாகாண சபை காணி மற்றும் போலீஸ் அதிகாரத்தை தமக்கு வழங்குமாறு நீதிமன்றங்களை நாடும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
ஆகவே நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் மாகாண சபைகளை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.