நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கையில் ஆய்வு மேற்கொள்ளப்போவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை, மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அதன் தலைவர் நவநீதம்பிள்ளையை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் செவ்வாய்க்கிழமையன்று சந்தித்துப் பேசினர்.
அப்போது டெசோ மாநாட்டு தீர்மானங்களின் அடிப்படையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையை நவநீதம்பிள்ளையிடம் ஸ்டாலின் வழங்கினார். சுமார் 35 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார்.
இச் சந்திப்பை அடுத்து தி.மு.க. தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கை போர்க் குற்றங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை, இந்தத் தீர்மானம் அமெரிக்கா கொண்டு வந்து இந்தியா ஆதரித்ததாகும். இந்நிலையில் இது எந்தளவுக்கு செயற்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலம் ஆய்வு செய்யவுள்ளோம் என்றார்.
மேலும் இது தொடர்பாக தனது தலைமையிலான குழுவொன்று ஜனவரி மாதம் இலங்கைக்குச் சென்று மேற்பார்வையிடும் என்றும் நவநீதம்பிள்ளை கூறியதாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.