இலங்கை நாடாளுமன்ற-நீதிமன்ற மோதல் முற்றுகிறது

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீதோ, நாடாளுமன்றத்தின் மீதோ அல்லது சபாநாயகரால் நியமிக்கப்பட்ட எந்தவொரு குழுவின் மீதோ எந்த ஒரு வெளி நிறுவனமும் அதிகாரம் செலுத்த முடியாது என்று இலங்கை சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணை குறித்து தனது தீர்ப்பை வெளியிட்ட சபாநாயகர், நாடாளுமன்றத்துக்கு உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளதாக தகவலதுறை அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

ஆகவே நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கான உச்சநீதிமன்றத்தின் அழைப்பாணையை நாடாளுமன்றம் நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றஞ்சாட்டி பதவியிறக்குவதற்கான பிரேரணையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் மீது வழக்கு தாக்கல் செய்வது என்பது நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் செயல் என்று முன்னதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் நவம்பர் 30 ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளது.

யதார்த்தமான சட்டங்களின்படி தெரிவுக்குழு இந்த குற்றஞ்சாட்டும் தீர்மானத்தை விசாரிக்க முடியாது என்று கூறியே அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TAGS: