யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் தாங்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வழிசெய்யப்பட வேண்டும் எனக்கோரி நேற்று வகுப்புக்களைப் புறக்கணித்திருக்கின்றார்கள். இது இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் இரண்டு நாட்களாக மாணவர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலின் பின்னர், பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாதவாறு அங்கு படையினர் நிறுத்தப்பட்டு, அச்சுறுத்தல் சூழல் நிலவுவதாகவும், இதன் காரணமாகவே தாங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்திருப்பதாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் தெரிவித்தார்.
மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு காரணமாக யாழ் பல்கலைக்கழகம் வெறிச்சோடிக் கிடந்ததாகவும், எனினும் பல்கலைக்கழகப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் காவல் கடமையில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, றுகுணு மற்றும் பேராதனை பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்திருக்கின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவங்களின்போது, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியரும் மற்றும் செய்தியாளர்களும் தாக்கப்பட்டதை ஊடக நிறுவனங்கள் கண்டித்திருக்கின்றன.
இது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் சுதந்திர ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், நீதிமன்ற உத்தரவின்றி செய்தியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என்பன ஊடக சுதந்திரத்தை முடக்குவதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து பெரிதும் அக்கறை கொண்டிருப்பதாகக் கூறியுள்ள அந்த அறிக்கை, பொறுமையைக் கடைப்பிடிக்கும்படியும், அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும் அதிகாரிகளைக் கோரியிருக்கின்றது.