இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை அவசியம்; ஐநாவிடம் TNA வலியுறுத்து

சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரி யங்வான் பொபிலீ உள்ளிட்ட ஐ.நா பிரதிநிதிகள் குழுவினரை கொழும்பிலுள்ள ஐ.நா தூதுவராலயத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்;

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் போருக்குப் பின்னரான காலப் பகுதியில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் அரசியல் தீர்வு என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தைகள் முடிவுற்றுள்ளன.

அத்தோடு தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை கொடுக்கும் போக்கினை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கவும் இல்லை. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு சில நாட்களுக்குள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆகியோர் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மிக விரைவில் எட்டப்படும் எனவும், இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் எனவும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 3 வருடங்களை கடந்துள்ள போதும் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படாத நிலையிலும் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படாத நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், இலங்கை அரசாங்கமோ கோடிக்கணக்கான பணத்தினை செலவு செய்து வடக்கில் புதிதாக இராணுவ முகாம்களையும் இராணுவக் காவலரண்களையும் அமைத்து படைத்தரப்பை பலப்படுத்தி வருகிறது. அத்தோடு போர் காலத்தில் காணாமல் போனோர் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படாத நிலையிலும் இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பிலும் எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளாமலும் போர்க்குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினரை வைத்து போர்க் குற்றம் குறித்து அனைத்துலகத்தை ஏமாற்றும் வகையில் போர்க் குற்ற விசாரணை நடத்துவதாக ஏமாற்றி வருகிறது.

எனவேதான் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றம் தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணை குழு அமைக்கப்பட்டு நீதி கிடைக்கும் வகையில் உண்மைகளைக் கண்டறியும் வகையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம். அப்போதுதான் தமிழ் மக்களின் பிரச்னைகள் சிங்கள மக்களுக்கும் தெரியவரும் என தாம் பல விடயங்களை வலியுறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

TAGS: