தமிழ் மாணவர்களின் கைதைக் கண்டித்து உலகமெங்கிருந்தும் எதிர்ப்பலைகள்!

சிங்கள இனவாத அரசின் இந்த அடக்குமுறையினைக் கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேறும்படி தெரிவித்தும் கனடாவில், பிரித்தானியா, பிரான்ஸ் என பல நாடுகளிலுள்ள பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அந்நாட்டில் வாழும் ஏனைய இன மாணவர்களும் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதில் ஒருகட்டமாக கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, கைதான நான்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய், மாணவர் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் நிறுத்து, உடனடியாக யாழ். பல்கலைக்கழக சூழலிலுள்ள சிங்கள படையினரை மீளப்பெறு போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழர் தாயகத்திலுள்ள மாணவர்களுக்கு பக்கபலமாக தாம் இருப்போம் என்ற செய்தியினை அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள்  தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, யாழ். மாணவர்கள் மீதான படையினரின் அடக்குமுறையினை கண்டித்து பிரான்சில் கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

பிரான்சு மொழியில் பொறிக்கப்பட்ட பதாதைகள் மற்றும் துண்டு பிரசுரங்களுடன் கோசங்களை எழுப்பியவாறு சிறி லங்கா ராணுவத்தின் அட்டூழியத்தின் படங்களுடன் கொட்டும் மழையிலும் கூட கூடி நின்ற சம்பவமானது, அந்த வழியில் சென்ற பிற இன மக்களின் கவனத்தை திருப்பியது. பலர் அங்கு வந்து சிறி லங்காவில் நடைபெறும் நிகழ்வுகளை கேட்டறிந்து தமது ஆதரவையும் தெரிவித்தனர்.

நாம் தமிழர்கள், ஈழத்தில் சிங்கள அடக்குமுறைக்குள்ளாக்கப்படுவது எமது உறவுகள், ஆகவே விடுதலைக்கான போராட்டங்களை தொடர்ச்சியாக நாம் வாழும் நாடுகளில் முன்னெடுக்கவேண்டியது தமிழர்களாகிய நமது கடமை என பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு கூறியது.

TAGS: