‘இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை’

tamil_armyஇலங்கை இராணுவத்தில் சேர்க்கப்பட்டு சுகவீனம் உற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 தமிழ் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் எவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.

அந்தப் பெண்கள் உள்மன முரண்பாடு என்னும் உள நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், போருக்கு பின்னரான நிலையில் வன்னியில் பல இடங்களில் இப்படியாக பாதிக்கப்பட்டவர்களை தான் பார்த்திருப்பதாகவும் வவுனியா மருத்துவமனையின் உளநல மருத்துவரான டாக்டர் . சிவசுப்ரமணியம் சிவதாஸ் கூறுகிறார்.

இராணுவத்தினரால் அந்தப் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான எந்தவிதமான ஆதாரங்களையும் தான் அவர்களிடம் காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உண்மையில் தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற வகையில் அடிக்கடி புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் வரும் செய்திகள் தம்மை மிகவும் மோசமாகப் பாதித்திருப்பதாகவும், உண்மையில் அப்படியான நிகழ்வுகள் எதுவும் தமக்கு ஏற்படவில்லை என்றும் அந்தப் பெண்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தான் தமிழ் தேசியத்தை ஆதரிப்பவன் என்ற வகையில் இராணுவம் இவ்வளவு அவசரமாக பெண்களை பணிக்கு சேர்த்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்கின்ற போதிலும், ஒரு மருத்துவன் என்ற வகையில் இந்தப் பெண்கள் எந்த வகையிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்பதை உலகுக்கு சொல்ல வேண்டிய கடமை தனக்கு உண்டு என்றும் டாக்டர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக புலம்பெயர் தமிழர்களின் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுயிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: