படகுகளைத் தடுக்க இலங்கை- ஆஸ்திரேலியா கூட்டுத் திட்டம்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் ஆட்களை கொண்டுசெல்லும் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இலங்கையின் புலனாய்வு மற்றும் ஆயுதப் படையினருக்கு பயிற்சி வழங்கப் போவதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பாப் கார் தெரிவித்துள்ளார்.

bob_carr_sri_lankaஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலமாக தஞ்சம்கோரி வருவோரை தடுத்து நிறுத்தும் ஆஸ்திரேலிய அரசின் முக்கிய செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இலங்கை சென்றிருந்தார்.

இந்த ஆண்டில் மட்டும் படகுகள் மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்களில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேரை தடுத்து நிறுத்தியுள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது. நூற்றுக் கணக்கானவர்களை ஆஸ்திரேலிய அரசே அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பியிருக்கிறது. இன்னும் பலநூற்றுக் கணக்கானவர்களை பரிசீலனைக்காக ஆஸ்திரேலியா முகாம்களில் தடுத்துவைத்திருக்கிறது.

இவ்வாறு இலங்கைக்கு பலவந்தமாக திருப்பியனுப்பும் நடவடிக்கை தஞ்சம்கோரி வந்தவர்களை மீண்டும் சித்திரவதையாளர்களின் கைகளில் சிக்கச் செய்கின்ற வேலை என்று மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டிவருகின்றன. ஆனால் இலங்கை அரசோ இப்படியான குற்றச்சாட்டை தொடர்ந்தும் மறுத்துவருகிறது.

இதேவேளை, சித்திரவதைகளுக்கு உள்ளாகக்கூடியவர்கள் என்று கருதப்படக்கூடியவர்களை தாங்கள் திருப்பியனுப்பப்போவதில்லை என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.

இலங்கையிலிருந்து படகுகள் மூலம் தங்களிடம் வரமுனைவோர் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா அரசு அதன் கொழும்புத் தூதரகம் வழியாக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அண்மைக் காலங்களாக முன்னெடுத்துவருகிறது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர்களான பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ போன்ற உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சட்டவிரோத குடியேறிகளை படகுகள் மூலம் கடத்திக் கொண்டுவர உதவும் வலையமைப்புகளை முறியடிப்பதற்கான இருதரப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றை பாப் கார் இலங்கையில் தொடங்கி வைத்திருக்கிறார்.

அதற்காக அவர், நான்கு அம்சத்திட்டத்தை கொழும்பில் அறிவித்துள்ளார்.

இரு தரப்பிலும் கடற்படை மற்றும் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு, அதற்காக சிறப்பு புலனாய்வு பயிற்சிகளை இலங்கைக்கு வழங்குவது என்பது அந்த அம்சங்களில் முதன்மையானது.

அதேபோல கடலுக்குள் வைத்து படகுகளை வழிமறித்து தடுத்துநிறுத்துவதற்கான பயிற்சியையும் ஆகாயவழி கண்காணிப்பு வசதிகளையும் இன்னும் பல கடற்படை கருவிகளையும் இலங்கை கடற்படைக்கு வழங்குவதும் பார் கார் அறிவித்துள்ள இன்னொரு திட்டம்.

இதுதவிர உள்நாட்டில் தொழில் மற்றும் கல்வி வசதிகளை ஊக்குவிக்கும் செயற்பாட்டிலும் ஆஸ்திரேலிய அரசு ஈடுபடவுள்ளது.

இலங்கையிலிருந்து அபாயகரமான படகுப் பயணத்தை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் ‘பொருளாதார தேவைகளுக்காகவே’ தஞ்சம் கோரிவருகிறார்கள் என்று ஆஸ்திரேலியா கருதுகிறது.

TAGS: