இலங்கையில் போர் நடைபெற்றுமுடிந்து சில ஆண்டுகள் கடந்தாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஒன்று. ஆகவே புலிகள் அமைப்பை நினைவு கூறுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தெற்கே சிங்கள கிளர்ச்சியாளர்கள் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி. நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் ஜே.வி.பி. இன்று தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல. அதனால்தான் அந்த அமைப்பை சிங்களவர்கள் நினைவு கூறுவதற்க்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என அவர் கூறினார்.
இலங்கையில் 1971 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட புரட்சிகளினால் மரணமடைந்தவர்களை நினைவு கூர்வதற்கு சிங்களர்களுக்கு இடமளிக்கின்ற இந்த அரசாங்கம் போரில் மரணித்த தமிழ் மக்களை நினைவு கூர்வதற்கு இடமளிக்காமல் இடையூறுகளை ஏற்படுத்திவருகின்றது என அண்மையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே மகிந்த ராஜபக்சே இதனைத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.