தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 45 தமிழர்களை இலங்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்ட காலமாக தலைமறைவாக வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின்போது கைதுசெய்யப்பட்ட இவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் இன்று காலை புலிக் கொடி ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளதாக தமிழ் ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2004 ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
புலிக் கொடி பறக்கவிடப்பட்ட சம்பவத்தை அறிந்த இலங்கை இராணுவத்தினர் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்து கொடியை அகற்றியுள்ளனர்.