தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் சிறிலங்காவிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ்.எம் அலைவரிசை மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார்.
இச் சம்பவமானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூரியன் எவ்.எம் அலைவரிசையில் தைப்பொங்கல் தினமாகிய திங்கட்கிழமை நிகழ்ச்சியொன்று ஒலிபரப்பாகியது. “தமிழ் மக்களின் கலாசாரம் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றதா” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நேயர்கள் தொலைபேசியூடாக கருத்துக்களைக் கூற அந்தக் கருத்துக்கள் நேரடியாகவே ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன.
இந்த நிலையில் வவுனியாவிலிருந்து தொடர்புகொண்ட பெண்ணொருவர் தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடுகள் திட்டமிட்ட வகையில் சீரழிக்கப்படுகிறது என்று கூறினார். தமிழ் மக்களில் அக்கறையுடைய நிர்வாகம் ஒன்று இல்லாமையாலேயே கலாசார சீரழிவுகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் கூறினார்.
பின்னர் வன்னியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டினார். பாடசாலை செல்லும் வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவன் மாமரம் ஒன்றுக்கு அருகில் ஒழிந்து நின்று சிகரெட் புகைத்த போது அவ்வழியால் சென்ற சிறிலங்கா இராணுவத்தினன் ஒருவன் அங்கே வந்து அந்த இளைஞனை அடித்துள்ளார். அடிக்கும்போது “இந்த வயதில் சிகரெட் புகைக்கிறாயோ பிரபாகரன் இன்று இங்கு இருந்தால் இப்பிடிச் செய்வாயா” என்று கேட்டு அடித்துள்ளார்.
அதாவது பிரபாகரன் வன்னியில் இருந்தால் வன்னி உட்பட தமிழர் தாயகத்திலுள்ள யாருமே சீரழிவுக்கு உள்ளாகமாட்டான் என்பதை ஒரு சிங்கள இராணுவ வீரனே அறிந்து வைத்திருக்கின்றார். அந்தளவுக்கு தலைவரின் ஆட்சியில் கலாசார சீரழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இன்று அவை கட்டுக்கடங்காமல் செல்கின்றன என்றும் அந்தப் பெண் வானொலி அலைவரிசையில் கருத்து தெரிவித்தார்.
இதைக் கேட்ட வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் செய்வதறியாது திகைத்து வாயடைத்து நின்றனர். குறித்த பெண்ணின் உரையாடலை வானொலிகளில் கேட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்கள் அவரின் வீரத்தை மனதுக்குள் மெச்சினர்.