இலங்கை அரசு ஐ.நா சபைக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை

TNA-sampanthanஇலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எவ்வகையிலும் நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் கூறுகிறார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ, இராசமாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே சம்பந்தர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மட்டக்களப்பில் இவ்விழாவின் உரையாற்றிய அவர், நாட்டில் இயல்பு நிலையைக் கொண்டுவர இலங்கை அரசு இன்னும் பல விஷயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், பக்கசார்பற்ற விசாரணையை இலங்கை அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இவை ஜெனீவா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன எனவும் சம்பந்தர் கோடி காட்டினார்.

வடகிழக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேற இராணுவம் இடமளிக்க வேண்டும் எனவும், நிலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் உரையாற்றிய சம்பந்தர் கோரிக்கை விடுத்தார்.

சிறைகளில் இன்னும் தடுப்புக் காலவில் உள்ளவர்களின் நிலை குறித்து உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என ஜெனீவா கூட்டத்தில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

நாட்டிலே நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்படும் வகையில் ஒரு அரசியல் தீர்வு விரைவில் காணப்பட வேண்டும் என்றும் சம்பந்தர் இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.

TAGS: