‘இலங்கைப் போரில் மக்களின் இழப்பை தவிர்க்க இராணுவம் முயற்சித்ததாம்’

gota_lankaarmyஇலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்களின் இழப்பை தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று இராணுவ உள்ளக விசாரணை அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டம் குறித்து ஆராய்ந்த நல்லிணக்க ஆணைக்குழு இந்த போர் நிகழ்வுகள் குறித்து இலங்கை இராணுவமும் ஒரு உள்ளக விசாரணையை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

அதற்கமைய இராணுவத்தினால் நடத்தப்பட்ட உள்ளக விசாரணை அறிக்கை ஒன்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்களால் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்திலும் இப்படியான இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள் இழப்பை தவிர்க்கும் நோக்கில் புதிய யுக்திகள் கையாளப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

தற்போதுள்ள சர்வதேச மனித நேய சட்ட அடிப்படைகள், உள்நாட்டு போர் நடவடிக்கைகளுக்கு பொருத்தமற்றது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

இந்தச் சட்டங்கள் தேசிய அரசாங்கங்களை மாத்திரமே கட்டுப்படுத்தும் என்பதால், அவை மிகவும் சிக்கலான பல விடயங்களை கையாள பொருத்தமற்றவை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

அத்துடன் உள்நாட்டுப் போர்களின் போது சர்வதேச மனித நேய உதவி நிறுவனங்களுக்கென ஒரு குறிப்பிடத்தக்க விதிகள், நியமங்கள் ஆகியன எதுவும் கிடையாது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

ஆகவே உள்நாட்டு போர் நிலைமைகளை கையாளும் வகையில் புதிய உள்ளூர் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

கடந்த 30 வருட காலப் போரில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி புலைமையின்மை என்பது இராணுவத்தினருக்கு ஒரு பாதகமான அம்சமாக இருந்ததாகத் தெரிவித்துள்ள அந்த அறிக்கை அவர்களுக்கு மும்மொழி பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

போரில் உயிரிழந்த இராணுவ சிப்பாய்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த சிப்பாய்கள் ஆகியோரின் நலனைக் கவனிக்கவென இராணுவ தலைமையகத்தில் பிறிதான செயலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

இலங்கை நிலைமைகளை கருத்தில் கொண்டு அங்குள்ள போலிஸ் பிரிவு தொடர்ந்தும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கலாம் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து கருத்து கூறியுள்ள அந்த அறிக்கை, நாட்டின் எந்த பகுதியிலும் இராணுவத்தினரை வைத்திருக்கும் உரிமை அரசாங்கத்துக்கு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இந்த அறிக்கை பற்றி பல தரப்பினரிடம் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் வந்திருக்கின்றன.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஜெனிவா மாநாட்டை மனதில் வைத்து இந்த அறிக்கை வந்திருப்பதாகக் கூறியுள்ள இலங்கையின் மூத்த செய்தியாளரான அனந்த் பாலகிட்ணர், இந்த அறிக்கையை மாத்திரம் வைத்து போரின் ஏற்பட்ட முழுமையான அழிவுகள் குறித்த ஒரு முடிவுக்கு வரமுடியாது என்று கூறியுள்ளார்.

TAGS: