ஏழுநாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மூவரடங்கிய அமெரிக்க தூதுக்குழுவினரிடம் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட வேண்டும் என்று யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போர் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும், அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளைக் கூட அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை என யாழ் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய இன்னும் இராணுவம் வடபகுதியில் இருந்து குறைக்கப்படவில்லை என்றும், காணாமல் போனவர்கள் தொடர்பில் இன்னும் மக்களின் கண்ணீர் துடைக்கப்படவில்லை என்றும் அவர் எடுத்துக் கூறியிருக்கின்றார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இன்னும் சீரடையாத மீள்குடியேற்றம், முழுமை பெறாத வாழ்வாதார உதவி நிலைமைகள் போன்ற பல விடயங்கள் பற்றி தெரிவித்துள்ள யாழ் ஆயர், இறுக்கமாகச் செயற்படுகின்ற அரசாங்கத்தின் செய்றபாடுகளில் சமநிலை பேணுவதற்காக (Check and Balances) யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணை தூதரகம் ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இது குறித்து பதிலளித்த அமெரிக்கத் தூதுக்குழுவினர் இது குறித்து யோசிப்பதாகவும், இது உடனடியாகச் செயற்படுத்தக் கூடியதல்ல என்று தம்மிடம் தெரிவித்ததாகவும் யாழ் ஆயர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த அமெரிக்க தூதுக் குழுவினரைச் சந்தித்த யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கத்துருசிங்க, யாழ்ப்பாணத்தில் பொதுநல நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் போன்ற பல நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருவதாகவும், இது குறித்து இங்குள்ள மக்கள் நன்கறிவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் 2009 ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும், இராணுவத்தை மேலும் குறைப்பதற்கு இராணுவ தலைமையகத்தின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இங்குள்ள இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை என்றும் அவர் அமெரிக்க தூதுக்குழுவினரிடம் கூறியுள்ளார்.