‘இலங்கை நடவடிக்கைகளால் ஏமாற்றம்’ – பிளேக்

robert_blakeநல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்றாமை, வடமாகாண தேர்தலை தள்ளிப் போட்டு வருவதல் ஆகியவை போன்ற நடவடிக்கைகளின் மூலம் இலங்கை குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசுத்துறையின் துணைச் செயலர் றொபர்ட் பிளேக் அவர்கள் கூறியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸின் வெளியுறவு குழுவின், ஆசிய மற்றும் பசுபிக் துணைக்குழுவில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

இலங்கை விடயங்களில் 6 வருடங்கள் தான் பணியாற்றிவருவதாகவும், அந்த நாட்டை தனக்கு நன்றாக தெரியும் என்றும், அதனை ஒரு நட்பு நாடாக தான் கருதுவதாகவும் தெரிவித்த றொபேர்ட் பிளேக் அவர்கள், ஐநாவின் குழு ஒன்றால் பத்தாயிரம் முதல் நாற்பதினாயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன என்றும் கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு

இந்த விடயங்கள் குறித்து விசாரிப்பதற்கென ஒரு உள்ளூர் பொறிமுறையை ஆதரிப்பது என்று அப்போது அமெரிக்கா தீர்மானித்ததாக கூறிய பிளேக் அவர்கள், அதன் மூலமே நல்லிணக்க ஆணைக்குழு அங்கு உருவாக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆனால், அந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமல்படுத்துவதில் இலங்கை காட்டிய தாமதம் தமக்கு ஏமாற்றத்தை தந்ததாக பிளேக் கூறியுள்ளார்.

வடக்கு மாகாண தேர்தல் தள்ளிப்போடப்படுவது குறித்தும் அவர் ஏமாற்றம் வெளியிட்டார்.

தமிழ் தேசியக் கூடமைப்புடனான அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் பூர்த்தி செய்யப்படாமை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

13-வது திருத்தச் சட்டம் மற்றும் பிரதம நீதியரசர் விவகாரம் போன்றவற்றில், ஜனநாயகம் பின்வாங்கிச் செல்வது போன்ற நகர்வை தாம் காண்பதாகவும், அது ஏமாற்றம் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் காரணத்தினாலேயே இலங்கை மீது மேலதிக அழுத்தத்தை கொடுக்கக் ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை இந்தியா போன்ற பல நாடுகளுடன் சேர்ந்து தாம் கடந்த தடவை ஆதரித்ததாகவும் அவர் கூறினார்.

அதனடிப்படையில் இந்தத் தடவையும் அது குறித்த தீர்மானத்துக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

-BBC

TAGS: