உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு முழுமையான, வெளிப்படையான, நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார்கள்.
விழாவில் பேசிய பிரிட்டிஷ் துணைப் பிரதமரும், லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான, நிக் க்ளெக், பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பொதுவாக தாராளவாத விழுமியங்களான, சகிப்புத்தன்மை, மனித உரிமைகளைப் பேணுதல், பல்லினக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது, மாறுபட்ட கருத்தை மதிப்பது மற்றும் கருத்து சுதந்திரம் போன்றவற்றை மதிக்கிறார்கள் என்றார்.
இந்த விடயங்களை தாம் இலங்கையிடமும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாகப் பேசிய மற்றுமொரு லிபரல் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான , எட் டேவி, போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதுவரை அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தகச் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்று தான் வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், ”இந்தப் பிரச்னையில் பிரிட்டன் மட்டும் இலங்கை மீது பெரிய அழுத்தத்தை தந்துவிட முடியாது. அது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா போன்ற பிற நாடுகளுடனும் இணைந்து செயல்படவேண்டிய நிலையில் இருக்கிறது. அப்போதுதான் இலங்கையை ஒரு அரசியல் ரீதியான தீர்வைத் தர வலியுறுத்த முடியும்” என்றார்.
கூட்டத்தில் பேசிய பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவரும், தொழிற்கட்சியின் தலைவருமான, எட் மிலிபாண்டும், இலங்கை குறித்து பிரிட்டனில் உருவாகிவரும் அரசியல் கருத்தொற்றுமையை சுட்டிக்காட்டினார்.
”இன்றைய நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் மற்றும் பிற பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒரு செய்தியைச் சொல்லுகிறது. இலங்கை குறித்து, பிரிட்டனில் நடந்து வரும் விவாதம் எப்படி மாறி வருகிறது என்பதைப் பற்றியது அது. இந்த விவாதம் இலங்கையில் நடந்தவற்றுக்கு நடவடிக்கை வேண்டும் என்று ஒரு அனைத்துக்கட்சி கருத்தொற்றுமை உருவாகிவருவதை அது சுட்டிக்காட்டுகிறது” என்றார் எட் மிலிபாண்ட்.
முன்னதாக நிகழ்வில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற தலைமைச்செயலர் நியமித்த வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்த யாஸ்மின் ஸுக்கா, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லீ ஸ்காட், ஷிபான் மக்டொனா, கீத் வாஸ், போன்றோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா.சம்பந்தன் போன்றோரும் பேசினர்.
இந்த நிகழ்வில், சானல் 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் கேலம் மக்ரே தயாரித்த ”நோ பயர் ஸோன்” என்ற ஆவணப்படத்தின் சில பகுதிகள் திரையிடப்பட்டன.
-BBC