காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கொழும்பிற்கு வராமல் வவுனியாவில் தடுக்கப்பட்டமை குறித்து அமெரிக்க தூதரகம் கரிசனை கொண்டுள்ளதுடன் அதிருப்தியும் தெரிவித்திருக்கின்றது.
இது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
இக்குடும்ப அங்கத்தவர்கள், காணாமல் போன தமது அன்புக்குரியவர்கள் தொடர்பாக தகவல்களைக் கோரி நிற்பவர்களாவர். இந்தப் பிரஜைகளின சுதந்திர நடமாட்டத்திற்கு இடமளிக்குமாறு தூதரகம் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றது.
கருத்துக்கள் வெளிப்படுத்துவதற்கான உரிமையானது பிரபஞ்சத்திற்கு உரித்துடையதென்பதுடன், அது இலங்கை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது என குறிபபிட்டுள்ள அந்த அறிக்கை, இத்தகைய அடிப்படை சுதந்திரங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையூடாக ஜெனீவாவில் தீர்மானத்திற்கு ஐக்கிய அமெரிக்கா சர்வதேச பங்காளர்களுடன் ஆக்கபூர்வமான வகையில் பணியாற்றி வருகின்றது என தெரிவித்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலமாக தனது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென வற்புறுத்துகின்ற அதேவேளை, ஆணைக்குழுவானது காணாமல் போனமை குறித்து விசாரணை நடத்துமாறும் காணாமல் போனமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடயத்தைக் கையாள பொறிமுறையொன்றை அமைக்குமாறும் பரிந்துரைத்துள்ளது என்றும் அது சுட்டிக்காட்டியிருக்கின்றது.
கடந்த வருட ஐநா மனித உரிமை தீர்மானம் முதற்கொண்டு, இவ்விடயங்களில் பெரியளவில் முன்னேற்றம் காணப்படாமை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் முக்கிய விடயங்களில் பின்னோக்கிச் செல்கின்றமை தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் கரிசனை பெரிதும் அதிகரித்து வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதரகம் அனைத்து இலங்கையர்களும் சம அளவிலான உரிமைகளை அனுபவிக்கவும், கௌரவத்துடன் வாழவும், ஜனநாயகத்துடன் கூடிய பாதுகாப்பான மற்றும் சுபிட்சமான எதிர்காலத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளது.