தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் என எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
போர்க் காலப் பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக மிக மோசமான வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் போது மனித உரிமைகள் தொடர்பிலான ஐ.நா. சாசனங்கள் இலங்கையில் பாதுகாக்கப்படுவதாக எவ்வாறு கருதமுடியும் என்று ரணில் விக்கிரமசிங்க வினவினார்.
இதேவேளை, இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளான தமிழர் தாயப் பிரதேசத்தில் அண்ணளவாக 90, 000 தமிழ்ப் பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டு இலங்கைப் படையினரின் தொடர்ச்சியான பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.