இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவம் இழைத்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய வீடியோ மற்றும் புகைப்படங்களை உலகத்தமிழர் பேரவை ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கிறது.
புதிய புகைப்படத்தில், கீழ் உள்ளாடை மட்டும் அணிந்த தமிழ் இளைஞர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் உட்கார வைக்கப்பட்டிருப்பது காட்டப்படுகிறது.
இந்தக் குழுவில் 15 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் இருப்பதும் காணப்படுகிறது. இதை அடுத்து வரும் வீடியோ காட்சிகளில் இந்தச் சிறுவன் போலவே தோற்றமளிக்கும் ஒரு சிறுவன் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சியும் இருக்கிறது.
இந்த வீடியோ காட்சிகளில் சில பகுதிகளை லண்டனிலிருந்து இயங்கும் சானல் 4 தொலைக்காட்சி முன்னர் ஒளிபரப்பியிருந்தது.
இந்த படங்களை ஊடகங்களுக்கு வெளியிட்ட உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், இந்தப் படங்கள் உண்மையானவையா அல்லது திரித்து வெளியிடப்பட்டவையா என்பதைத் தம்மால் கூறமுடியாது; ஏனென்றால் அதற்கான தொழில்நுட்பம் தமது அமைப்பிடம் இல்லை என்று கூறினார்.
இது போன்ற சாட்சியங்களை விசாரிக்கவே ஒரு நம்பகமான, சுயாதீனமான, சர்வதேச விசாரணையை தாங்கள் கோருவதாகவும் அவர் கூறினார்.
இந்தப் படங்களை வெளியிட்டது யார் என்று கேட்டபோது, இதை வெளியிட்டவர்கள் இலங்கை இராணுவத்தினரே என்றும், அவர்களின் பெயரை, அவர்களது பாதுகாப்பு கருதி தாங்கள் வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்தப் புகைப்படங்களும், வீடியோ படங்களும் தவணை முறையில் வெளியிடப்படுவதில் ஒரு அரசியல் நோக்கம் இருக்கிறது என்று வரும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, முதலில் அனைத்து புகைப்படங்களும் தங்களிடம் இருக்கிறது என்று கூறுவது தவறு, ஆனால் அப்படியே இருந்தாலும் தவணை முறையில் அதை வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று சுரேன் சுரேந்திரன் கூறினார்.
“சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பான நிகழ்வுகள் நடக்கும் போதெல்லாம், மனித உரிமைகள் மீறல் பிரச்னை தொடர்பாக அழுத்தம் தர இது மாதிரி ஆதாரங்களை தவணை முறையில் வெளியிடுவதில் தவறு ஒன்றும் இல்லை.
மேலும், இந்தப் போரின் சாட்சியாகப் போர் நடந்த பகுதியில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களில் பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஒரு முறையான விசாரணை நடந்தால் போரில் என்ன கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பது குறித்து அவர்கள் சாட்சிகளாக இருப்பார்கள்,” என்றும் அவர் கூறினார்.