இலங்கைத் தலைநகர் கொழும்பில் வரும் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் புதுப்பிப்புக்கான கனடா சிறப்புத் தூதர் ஹக் சேகல் இது தொடர்பாகக் கூறியதாவது: கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்க எங்கள் பிரதமர் விரும்பவில்லை.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதியில் சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளின் செயல்பாடு, சுதந்திர நீதிமுறை, தமிழர்களுக்கு கூடுதல் தன்னாட்சி ஆகியவை செயலாக்கம் பெற்றதற்கு போதிய சாட்சிகள் இல்லை.
ஆகவே, அவர் கலந்து கொள்ள விரும்பவில்லை. கனடாவின் நான்கு பேர் கொண்ட பிரதிநிதிகள் பங்கேற்பர். ஆனால், இது பிரிட்டன் அரசின் முடிவு. இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதை கனடா ஊக்குவிக்கவில்லை. புறக்கணிக்கவும் நாங்கள் திட்டமிடவில்லை. மற்ற நாடுகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரப்போவதில்லை. இவ்விவகாரத்தில் இதுதான் எங்கள் அணுகுமுறை என்றார் சேகல்.