ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது 21-ந் தேதி வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.
ஜெனிவாவில் தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் போர் குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. திருத்தம் செய்வதற்கு வசதியாக, அமெரிக்க அரசின் வரைவு தீர்மானம் ஏற்கனவே மனித உரிமைகள் ஆணையத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பார்வைக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இத் தீர்மானத்தின் இறுதி வடிவத்தை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்துக்கான அமெரிக்க பிரதிநிதி எலின் டேனாவு இன்று காலை தாக்கல் செய்கிறார்.
இந்திய நேரப்படி இன்று பகல் 12 மணி வரை இத் தீர்மானத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். அதன்பிறகு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதம் முடிந்து 21-ந்தேதி வாக்கெடுப்பு நடைபெறும். இத்தீர்மானத்தின் மீதான இந்தியாவின் நிலைப்பாடு இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.