புலிகளுக்கு உதவிய நாடுகளை காட்டிக் கொடுப்பேன் என்கிறார் கேபி

KPகொழும்பு: ஈழப் போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு 11 நாடுகள் ஆயுத உதவியைச் செய்தன. ஆயுதங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் கொடுத்து உதவின. அந்த நாடுகள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடுவேன் என்று கேபி என்ற குமரன் பத்மநாதன் கூறியுள்ளார்.

இலங்கைக்கு சர்வதேச அளவில் தற்போது நெருக்கடி அதிகரித்து வருகிறது. போர்க்குற்றம், மனித உரிமை மீறல், மனிதாபிமானமற்ற படுகொலைகள் என்று சர்வேதேச சிக்கலுக்குள் மேலும் மேலும் வலுவாக சிக்கி வருகிறது இலங்கை. மேலும், இலங்கை ராணுவம் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்காவும் கூறியுள்ளது. இந்த நிலையில்தான் கேபி இப்படிப் பேசியுள்ளார்.

இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு நாடுகள் உதவின, அவர்களுக்கு ஆதரவாக இருந்தன, அவர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர வேண்டும் என்று மறைமுகமாக இலங்கை அரசு கருத்து வெளியிட்டிருப்பதாக கருதப்படுகிறது.

முள்ளிவாய்க்கலில், புலிகளின் பதுங்குழிகளில் இருந்து கிடைத்த ஆவணங்கள் மூலம் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளனவாம். அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் எம்.16 ரக துப்பாக்கிகள் மற்றும் ஏனைய உபகரணங்களும் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர நார்வே நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரா என்ற செய்மதி கட்டமைப்பு மற்றும் புலிகளின் விமானங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் ஐரோப்பாவில் உள்ள இரண்டு நாடுகளிடம் இருந்து பெறப்பட்டதாக புலிகளின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அத்துடன் புலிகளின் கப்பல்கள் சர்வதேச கப்பல் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தமைக்கான ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளனவாம்.

இலங்கை ராணுவம் பெற்றுக்கொள்ள முடியாத தொடர்பாடல் கருவிகளை கூட சில நாடுகள் புலிகளுக்கு வழங்கியிருந்தன. இது தொடர்பாக புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தர் கே.பி சாட்சியாக முன் நிறுத்தப்பட உள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

TAGS: