‘பணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’

keheliya_rambukwellaஇலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று கோரிக்கை விடுக்கும் கனடா மற்றும் மனித உரிமை அமைப்புகள் முன்னாள் புலிகளிடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் பணம்வாங்கிக் கொண்டு வேலை செய்வதாக இலங்கை அரசாங்கம் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

தம்மீதான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் பேச வேண்டிய தரப்பினருடன் பேசி முடிந்துவிட்டது என்றும் இலங்கையில் மாநாட்டை நடத்தும் விடயத்தில் தடைகள் ஏதும் இல்லை என்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தம்மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கும் அமைப்புகள் பக்கச்சார்புடன் செயற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் படுகொலைகளிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டபோது மனித உரிமை அமைப்புக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எங்கே போனார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மனித உரிமை அமைப்புகள் பணம் வாங்கிக்கொண்டு பேசுவதாக சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டபோது, இலங்கை மீது மனித உரிமை குற்றச்சாட்டு சுமத்துபவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று இலங்கை அமைச்சர் கேட்டார்.

‘இலங்கை இறைமையுள்ள ஜனநாயக நாடு, இங்கு சுயாதீன விசாரணை எல்லாம் நடத்த முடியாது’ என்றும் அமைச்சர் கெஹெலிய கூறினார்.

TAGS: