காமன்வெல்த் அமைப்பிலுள்ள நாடுகளுடைய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இவ்வாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் தருகின்ற ஒரு முடிவு என கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட் கூறியுள்ளார்.
காமன்வெல்த் அமைப்பு என்பது அடிப்படையில் சட்டத்தின் மாட்சிமை, ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விழுமியங்கள் சார்ந்த ஒரு கட்டமைப்பு என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட கனடிய அமைச்சர், இந்த விழுமியங்கள் அனைத்திலுமே இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று கூறினார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் போர்க்குற்றங்கள் நடந்தன என்பதற்கான வலுவான ஆதாரங்களும் அதிகரித்துவரும் தடயங்களும் கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார போக்கு நாளுக்கு நாள் வளர்ந்துவருவதாகக் கூறிய கனடிய வெளியுறவு அமைச்சர், அண்மையில் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
இலங்கையில் போர்முடிந்ததிலிருந்து தமிழ் மக்களுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என்றும் நாளுக்கு நாள் அங்கு நிலைமை மோசமடைந்துவருவதாகவும் ஜான் பேர்ட் குற்றஞ்சாட்டினார்.
18 மாதங்களுக்கு முன்னர் கனடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர், இலங்கை மீள் இணக்கத்திலும் போர்க்காலச் சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறலிலும் ஏதேச்சாதிகாரப் போக்கை நிறுத்துவதிலும் முன்னேற்றம் காட்டவேண்டும் என்று கோரியிருந்ததாகவும் ஆனால் இலங்கையில் நிலைமை மோசமடைந்துள்ளதே தவிர, முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்பது காமன்வெல்த் விழுமியங்களுக்கான ஒரு சோதனை என்று கூறிய ஜான் பேர்ட், ‘ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில், ஹியுமன் ரைட்ஸ் வாட்ச், காமன்வெல்த் ஊடகவியலாளர்கள் அமைப்பு, காமன்வெல்த் சட்டத்தரணிகள் அமைப்பு, காமன்வெல்த் சட்டக் கல்வியலாளர்கள், நீதிபதிகள் அமைப்புகள் இப்படி எல்லாமே இலங்கை அரசாங்கம் இன்று நடந்துகொண்டிருக்கும் முறைபற்றி விமர்சித்துள்ளன. கனடாவைப் பொறுத்தவரை இவை முக்கியம்’ என்று மேலும் தெரிவித்தார்.
-BBC