‘புலம்பெயர் சமூகம் வன்னி மக்களுக்கு உதவவில்லை’: மகிந்த ராஜபக்ஷ

mahinda_rajapakseஇலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ‘படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை’ என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.

இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொது மக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

‘மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்’ என்றார் மகிந்த ராஜபக்ஷ.

தூக்கு மேடை வரை செல்லவேண்டியிருந்தவர்களுக்கு அரசாங்கம் மன்னிப்பளித்து புனர்வாழ்வு கொடுத்ததாகவும் 4000 தமிழர்களை சிவில் படையில் இணைத்துள்ளதாகவும் முப்படைகளிலும் சேர்ப்பதற்கு ஆட்கள் வரிசையில் நிற்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

படையினர் உயிர்த் தியாகம் செய்து வென்றெடுத்த நாட்டில் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட பறிப்பதற்கு இடம்கொடுக்கப் போதுமில்லை. நாட்டைப் பிரிக்க இடமளிக்கப் போவதுமில்லை என்றும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார்.

TAGS: