கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு கருணா என்றழைக்கப்படும் பிரதியமைச்சர் முரளிதரன் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, உள்ளிட்ட பெரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என இலங்கை அரசால் குற்றஞ்சாட்டப்பட்l சுமார் 200 மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் பொது மன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கை அரசால் பெரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை விடுதலை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம், பிரதி அமைச்சராக அங்கம் வகிக்கும் கருணா கேட்டிருந்தார். எனினும், இவர்களை விடுதலை செய்ய முடியாது என இலங்கை அரசாங்கம் கருணாவிடம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்த கருணா 2004-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார்.