தெரிவுக்குழு குறித்து விரைவில் முடிவு: ததேகூ

eelam23613இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசு நியமித்திருக்கும் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்னமும் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்தார்.

இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் 19 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை இலங்கை அரசு வெள்ளியன்று அறிவித்திருக்கிறது. இந்த தெரிவுக்குழுவில் சேரும்படி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் அழைப்பு வந்ததாகவும், ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் இந்தியா செல்வதற்கு முன்பாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த சம்பந்தர், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் இது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.

வெளிநாட்டில் இருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அனைவரும் இலங்கை திரும்பிய பிறகு, எல்லோரும் கலந்துபேசி இந்த தெரிவுக்குழு தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை தாங்கள் எடுக்கவிருப்பதாகவும் சம்பந்தர் தெரிவித்தார்.

இந்திய பயணத்தின்போது இலங்கை அரசின் இந்த தெரிவுக்குழு குறித்து இந்திய அரசிடம் தாங்கள் முக்கியத்துவம் கொடுத்து பேசவில்லை என்று கூறிய சம்பந்தர், பதின்மூன்றாவது சட்டத்திருத்தம் தொடர்பாகவே இந்திய பிரதமர் உள்ளிட்ட இந்திய தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் விரிவாக பேசியதாகவும் கூறினார். -BBC

TAGS: