மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை

eelam25613aஇலங்கையில் மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை என்று அரசாங்க அமைச்சர்கள் சிலர் சூளுரைத்துள்ளனர்.

அவர்கள் கொழும்பில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்கள் மாகாணசபை முறையை மாற்றியமைக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்துக்காகவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்துக்கு வழங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான வாசுதேவ நாணயகக்கார, ராஜித்த சேனாரத்ன, திஸ்ஸ வித்தாரண, டியு குணசேகர, சந்திரசிறி கஜதீர உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் இந்த ஊடக சந்திப்பில் பேசினார்கள்.

இவர்களோடு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஈபிடிபி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என்றும் முன்னர் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

‘ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரங்களை தமிழர்களுக்கு பகிர்ந்தளிப்பதாக கடந்த காலங்களில் சிலர் கூறினார்கள். விடுதலைப் புலிகள் இருக்கிறபடியால் தான் தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர்கள் கூறினார்கள். அவர்கள் இருக்கும்போது அதிகாரங்களை பகிர்ந்தளித்தால் புலிகள் நாட்டை பிரித்துவிடுவாரகள் என்று பிரச்சாரம் செய்தார்கள். இப்போது புலிகள் இல்லை. ஏன் அதிகாரங்களை கொடுக்க வேண்டும் என்று அதே நபர்கள் இன்று கூறுகிறார்கள்’ என்றார் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன.

உலகில் பல நாடுகளில் பிரிவினைக் கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்ட பின்னர் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையையும் அமைச்சர்கள் இங்கு சுட்டிக்காட்டினார்கள்.
தமிழர் தரப்பு தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத் தரப்பால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளதாகவும் அமைச்சர்கள் கூறினார்கள்.

‘காணி அதிகாரம் கொடுத்துவிட்டு பின்னர் காணிகள் ஆணைக்குழு மூலம் ஜனாதிபதி ஜேஆர் அதனைப் பறித்துக்கொண்டார். பொலிஸ் அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு பொலிஸ் ஆணைக்குழு மூலம் அதனையும் பறித்துவிட்டார்’ என்றும் அமைச்சர் ராஜித்த கூறினார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது என்றும் மாகாணசபைகளுக்கு உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பறித்துவிட வேண்டும் என்றும் ஆளும் சுதந்திரக்கூட்டமைப்பு அரசிலுள்ள விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் கடும்போக்கு பௌத்தவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. -BBC

TAGS: