தமிழ் பள்ளி மாணவர்களுக்கு மறுசுழற்சி தொழில் உகந்ததா?

இராகவன் கருப்பையா – “நம் நாட்டில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அயல்நாட்டினர் நிறைய சம்பாதிக்கின்றனர். அந்த வேலையை நாம் ஏன் செய்யக் கூடாது,” என்று தமிழ் பள்ளி மாணவர்களிடம் உரை நிகழ்த்திய ஒரு சட்டமன்ற உறுப்பினர் கருத்து விவாததிற்குள்ளாகியது.

செய்யும் தொழிலே தெய்வம் என்றாலும், அந்த தொழிலின்  தன்மை செய்பவர்களின் சுயமதிப்பை, சமூக மதிப்பீடுகளில் வெகுவாக தாழ்த்தும் தன்மையையும் கொண்டுள்ளது.

“நம் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதி எனும் வகையில் எங்கள் பிள்ளைகளிடம் தன்முனைப்பைத் தூண்டும் வகையில் உரையாற்றுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.”

“ஆனால் குப்பை அள்ளும் வேலையை செய்யத் தூண்டி உற்சாகப்படுத்த முனைவார் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை,” என அந்த பெற்றோர்கள் மன வேதனையுடன் குறிப்பிட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள தமிழ் பள்ளியொன்றில் நடைபெற்ற, சிறந்த மாணவர்களுக்கான விருதளிப்பு நிகழ்ச்சிக்கு அந்த சட்டமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோதுதான் அவர் இவ்வாறு பேசியதாகத் தெரிகிறது.

“அந்நியத் தொழிலாளர்கள் இந்நாட்டுக்கு வருவதை நான் விரும்பவில்லை. நம்முடைய வேலைகளை அவர்கள் அபகரித்துவிடுகின்றனர்.”

“குப்பை கூளங்களை அள்ளும் தொழிலாளர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியுமா? மாதம் ஒன்றுக்கு சராசரி 17,000 ரிங்கிட் வரையில் கூட அவர்கள் சம்பாதிக்கின்றனர்.”

“தாங்கள் அள்ளும் குப்பையை மதிப்புக்கு ஏற்றவாறு பல வகையில் தரம் பிரித்து மறுசுழற்சிக்காக அவர்கள் விற்பனை செய்கின்றனர். இந்த வேலையை நாம் ஏன் செய்யக்கூடாது?”

“கடந்த காலங்களில் நம்மவர்கள் செய்த செம்பன அறுவடை வேலையைக் கூட இப்போது அவர்கள் பறித்துக் கொண்டார்கள்,” என அந்த சட்டமன்ற உறுப்பினர் தமதுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

குப்பை அள்ளும் பணியும் நேர்மையான ஒரு தொழில்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்பணியை தரம் தாழ்த்தி எடை போடுவதற்கில்லை.

இருந்த போதிலும் நம் தமிழ் பள்ளி மாணவர்களை அவ்வேலையைச் செய்ய ஊக்குவிப்பதை விடுத்து அதன் தொடர்பான தொழில்நுட்பம் குறித்த ஆலோசனையை அவர் வழங்கியிருக்கலாம்.

அதாவது அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுப் பொருட்களை பயனானப் பண்டங்களாக மாற்றியமைக்கக் கூடிய வழிமுறைகளை ஆராய்ச்சி செய்யுமாறு அவர் யோசனை வழங்கியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும்.

இத்துறையிலும் கூட மிகப் பெரிய தொழில் முனைவர்களாக வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று அந்த சட்டமன்ற உறுப்பினர் ஊக்கம் கொடுத்திருக்க வேண்டும்.

ஆக பள்ளிப் பிள்ளைகளின் முன்னிலையில் பேசும் அரசியல்வாதிகள் மானாவாரியாகக் கருத்துகளை அள்ளி வீசாமல் மிகவும் கவனமாக யோசித்து, நிதானித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கவது அவசியமாகும்.