மூன்றாம் அணியின் பலம்: தமிழகம் ஓர் எடுத்துக்காட்டு

இராகவன் கருப்பையா – ஒரு ஜனநாயக நிர்வாகத்தில் 3ஆம் அணியின் பலம் எந்த அளவுக்கு சக்திவாய்ந்ததொரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு நடந்து முடிந்த தமிழ் நாட்டின் மாநில சட்டமன்றத் தேர்தல் நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

தங்களை அசைக்க ஆளில்லை எனும் மமதையில் ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு அத்தேர்தல் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இரு மாபெரும் வட்டாரக் கட்சிகள் அதிகார நாற்காலிகளை ‘உடும்புப் பிடி’யாகப் பிடித்துக் கொண்டு மாறி மாறி அங்கு ஆட்சி புரிந்த சகாப்தம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

மத்திய அரசாங்கத்தின் ஜாம்பவான்களான காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. போன்ற கட்சிகள் கூட தமிழ் நாட்டு அரசியலுக்குள் ஊடுருவ முடியாத நிலையில் சினிமா நடிகர் விஜையின் தமிழக வெற்றிக் கழகம்(த.வெ.க.) மிகப் பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது நாம் அறிந்ததே.

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட அக்கட்சி, ‘இளைஞர் சக்தி,’ மற்றும் ‘அரசியல் சீர்திருத்தம்,’ ஆகிய அம்சங்களை முன்னிறுத்தி களத்தில் இறங்கி வெற்றியும் கண்டது குறிப்பிடத்தக்கது.

அதிகாரம் இல்லாமல், பதவி இல்லாமல், மக்கள், குறிப்பாக இளைஞர்களின் நம்பிக்கையை மட்டுமே ஆயுதமாக வைத்து தமிழக அரசியலில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது அக்கட்சி.

‘சாது மிரண்டால் காடு கொள்ளாது,’ எனும் சொற்றொடருக்கு ஏற்ப, இதுநாள் வரையில் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த பாரம்பரியக் கட்சிகளுக்கு பாடம் புகுட்டப்பட்டுள்ளது.

நம் நாட்டில் அண்மைய கால அரசியல் நகர்வுகளை சற்று உன்னிப்பாக கவனிப்போமேயானால் இதுபோன்ற ஒரு சூழல் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரிகிறது.

முன்னாள் பிரதமர்களான நஜிப், முஹிடின் மற்றும் சப்ரி மட்டுமின்றி தற்போதைய துணைப் பிரதமரான அஹ்மட் ஸாஹிட் கூட ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.

‘ரிஃபோர்மாசி'(Reformasi) எனப்படும் சீர்திருத்தம் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் எனும் வாக்குறுதியின் அடிப்படையில்தான் மடானி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது எனும் விவரம் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அந்த சீர்திருத்தம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஜ.செ.க. போன்ற பெரிய கட்சிகள் கூட தற்பொழுது தங்களுடைய அதிருப்தியை வெளிக்காட்டத் தொடங்கிவிட்டன.

மதத்தை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் நடத்துகிறது பாஸ் கட்சி. முன்னாள் பிரதமர் முஹிடினின் பெர்சத்து சின்னாபின்னமாக சிதறிக்கிடக்கிறது.

ஊழலுக்கு பெயர் பெற்ற அம்னோ, நீக்கப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டு பழையபடி மமதையில் ஆடுகிறது. பி.கே.ஆர். கட்சியிலும் விரிசல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது?யாருக்குதான் வாக்களிப்பது? எந்தக் கட்சி ஊழலற்ற நல்லாட்சியை வழங்கும்? இதுபோன்ற கேள்விகளுக்கு வெகுசன மக்கள் விடை தேடத் தொடங்கிவிட்டனர்.

சுமார் 80 மில்லியன் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட தமிழகத்தில், பலம் பொருந்திய இரு பெரும் மூத்தக் கட்சிகளை, இளைஞர் சக்தியைக் கொண்டு 3ஆம் அணியாக உருவெடுத்த ஒரு புதிய கட்சி புரட்டிப் போட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இளையோரைத் திரட்டி, முறையான, ஆக்ககரமான அணுகுமுறையைக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் 3ஆம் அணி தனது பலத்தை வெளிக் கொணர முடியும் என்பதற்கு விஜையின் த.வெ.க. நல்லதொரு உதாரணம்.

மாநிலம் முழுவதும் அந்த கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களில் சாரை சாரையாகத் திரண்ட பொது மக்கள் வெறும் சினிமா கூட்டம்தான் என தொடக்கத்தில் பரவலாகக் கருத்துரைக்கப்பட்டது.

ஆனால் அவர்கள்தான் ‘அமைதிகாக்கும் பெரும்பான்மையினர்,'(Silent majority) என்பதை அரசியல் ஆய்வாளர்கள் கூட உணரத் தவறிவிட்டனர்.

ஆக, நமது முன்னாள் அமைச்சர்களான ஹம்ஸா ஸைனுடின் அல்லது ரஃபிஸி ரம்லி போன்றோர் 3ஆம் அணிக்கு வித்திடுவார்களேயானால், மாற்றத்திற்காக ஏங்கித் தவிக்கும் ‘அமைதிகாக்கும் பெரும்பான்மையினர்’ அவர்களுடைய பங்கை செவ்வனே ஆற்றுவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.