நாளை 5.2 மீட்டர் உயரலை எதிர்பார்க்கப்படுவதால், கடலோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆறுகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளநீர், கடல் நீர்மட்டம் உயரும் நேரத்தில் ஒன்றாகக் கலக்கக்கூடும் என்றும், இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கம்போங் மலாயு சுபாங் பகுதியில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் தெரிவிக்கின்றன.

சிலாங்கூரின் தாழ்வான மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள், நாளை எதிர்பார்க்கப்படும் அதிக அலை காரணமாக வெள்ள அபாயத்தை முன்னிட்டு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்போது கடல் நீர்மட்டம் 5.2 மீட்டர் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, புலோ (Buloh) மற்றும் இஜோக் (Ijok) ஆறுகளிலிருந்து பெருக்கெடுத்து வரும் நீர், கடல் அலையின் உயர் மட்டத்துடன் இணையும் வாய்ப்புள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும்.

குறிப்பாக கோலா சிலாங்கூர் (Kuala Selangor) சுற்றுவட்டாரத்தில் உள்ள கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்கூட்டியே வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று கம்போங் மலாயு சுபாங்கில் ஏற்பட்ட வெள்ளம், அப்பகுதியின் வடிகால் அமைப்பில் நீர் நிரம்பி வழிந்ததன் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கம்போங் மலாயு சுபாங்கில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதைக் காட்டும் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்ததுடன், வீடுகளின் வளாகங்கள் மற்றும் அப்பகுதிக்குச் செல்லும் சாலைகளின் சில பகுதிகளும் நீரில் மூழ்கின.

திரட்ஸ் சமூக ஊடகப் பயனரான நூருல் அசுவானா, சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே மழை பெய்த நிலையில், வெள்ளநீர் மட்டம் உயரத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.

மற்றொரு பயனரான ஹைனாராவர்1, இந்த வாரத்தில் மட்டும் அப்பகுதியைத் தாக்கிய மூன்றாவது திடீர் வெள்ளம் இதுவெனத் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 2), கம்போங் மலாயு சுபாங்கில் சுமார் 92 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.