இணையவழித் தாக்குதல்கள் குறித்த கவலைகளைத் தொடர்ந்து, பொதுமக்கள் பதற்றமடைந்து பொருட்களை அதிகளவில் வாங்கிக் குவிக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

72 மணி நேரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பொதுமக்கள் முன்கூட்டியே வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று மலேசிய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு (Fomca) பரிந்துரைத்துள்ள நிலையில், அது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

எனவே, பொதுமக்கள் பதற்றமடைந்து பொருட்களை அதிகளவில் வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும், வழக்கம்போல் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை வாங்குமாறும் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு அறிவுறுத்தியுள்ளார்.

“தற்போதைய சூழ்நிலை, குறிப்பாக இணையவழி அச்சுறுத்தல்கள் குறித்து நாங்களும் கவலை கொண்டுள்ளோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இருப்பினும், உணவுப் பொருட்களைப் பொதுமக்கள் முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடும் நிலையை நாம் இன்னும் எட்டவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

இன்று மலாக்கா, புக்கிட் காத்திலில் நடைபெற்ற ‘Himpunan Semarak Tani Jualan Agro Madani’ நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலை மற்றும் இயற்கைப் பேரிடர்கள் காரணமாக உணவுப் பொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைந்தது 72 மணி நேரத்திற்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு நுகர்வோருக்கு Fomca நேற்று அறிவுறுத்தியிருந்தது.

இதுகுறித்து மேலும் கருத்துரைத்த முகமட், நாட்டின் அரிசி கையிருப்பு அடுத்த ஆறு மாதங்களுக்குப் போதுமானதாக இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

உறையவைக்கப்பட்ட மீன்களின் கையிருப்பும் அடுத்த எட்டு மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என உறுதியளிக்கிறோம். எனவே, தேவைக்கு அதிகமாகப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை.

“பொருட்களை அளவுக்கு அதிகமாக வாங்கிக் குவிப்பது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன், மற்ற நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதையும் சிரமமாக்கும்,” என்று அவர் கூறினார்.

மேலும், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தற்போதைய நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், காலநிலை மாற்ற நிபுணர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் இணைந்து நிலைமையை மதிப்பிட்டு வருவதாகவும் முகமட் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஆரம்பக் கட்டமாக, மலேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையம் மற்றும் குளிர்பதன வசதிகளைக் கொண்ட தனியார் வணிகர்கள் ஆகியோரிடம் மீன் கையிருப்பை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக, சந்தையில் அதிகத் தேவை உள்ளதுடன் பொதுமக்கள் விரும்பி வாங்கும் மீன் வகைகளை அதிகளவில் இருப்பு வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நாடு முழுவதும் நடத்தப்படும் அக்ரோ மடானி விற்பனைத் திட்டங்களின் எண்ணிக்கையை 5,000 ஆக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளதாகவும் முகமட் கூறினார். இதுவரை 3,400 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் நுகர்வோர் பொருட்களை 10 முதல் 30 விழுக்காடு வரை குறைந்த விலையில் வாங்க முடியும். குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

உள்ளூர் மளிகைக் கடைகளும் தங்களது வியாபாரத்தை நடத்த வேண்டியிருப்பதால், இதுபோன்ற நிகழ்ச்சிகளை தினமும் நடத்த முடியாது. எனவே, வாரந்தோறும் இத்திட்டத்தை நடத்துகிறோம்.

“இதன் மூலம் பொதுமக்கள் பணத்தைச் சேமிக்க வாய்ப்பளிப்பதுடன், உள்ளூர் வியாபாரிகளின் வணிகமும் தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதிப்படுத்த முடியும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.