மாற்றங்கள் ஆறு. நாகப்பன் கண்களில் பட்டதாகத் தெரியவில்லை

elanjeliyanவணக்கம். என்றுமில்லா அளவிற்குத் தமிழ்ப்பள்ளிகள் இன்று முன்னேறியிருக்கின்றன. ஆறாம் ஆண்டு யுபிஎஸார் தேர்வில், சினப்பள்ளி மாணவர்களைக் காட்டிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைகின்றனர். காலங்காலமாக இருந்த அடிப்படை கட்டடச் சிக்கல்கள்கூட இன்று ஓளவுக்குத் தீர்க்கப்பட்டுள்ளன.

இம்மாற்றங்கள் முனை. ஆறு. நாகப்பன் அவர்களின் கண்களில் பட்டதாகத் தெரியவில்லை. பழைய பல்லவியை மீண்டும் பாடியிருக்கிறார். பிரதமர் நஜிப் நிர்வாகத்தைக் குறை சொல்லும் வேகத்தில், ஆங்காங்கு அமைக்கப்பட்டு வரும் பள்ளி வாரியங்களையும் சாடியிருக்கிறார்.

தமிழ், சீனப் பள்ளிகளில் பள்ளி வாரியங்கள் இயங்க வேண்டுமென்று 1996 கல்வி சட்டம் கூறுகிறது. (1961 ஆம் ஆண்டு கல்விச் சட்டமும் இதனையே கூறியது.) இருந்த போதிலும், சில ஆண்டுகளுக்கு முன்புவரை 50 க்கும் குறைவானப் பள்ளி வாரியங்களே நாட்டிலிருந்தன. இந்நிலையை மாற்ற தமிழ் அறவாரியம் எடுத்துக் கொண்ட முயற்சி மிகப் பெரியது. இது முனை. நாகப்பனுக்கு புரிந்திருக்கவில்லை. தாழியை உடைப்பதற்கு ஒப்பான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025, கடந்தாண்டு கல்வியமைச்சால் வெளியிடப்பட்டது. அதனை முனை. நாகப்பன் ஆழ்ந்து வாசித்தால், அவர் மேலே எழுப்பிய பல கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் அவருக்குப் பதில் கிடைக்கும். அரசு உதவி பெரும் அனைத்து பள்ளிகளையும் (இதில் தமிழ்ப்பள்ளிகளும் சேர்த்தி) அரசு பள்ளிகளாக மாற்ற கல்வியமைச்சு திட்டமிட்டிருக்கிறது. தவிர்த்து, அரசு பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குமிடையே பெரிய வேறுபாடுகள் இருக்காது என்றும் பெருந்திட்டம் கூறுகிறது. இதெல்லாம் நடக்குமா இல்லையா என்பதிலும் அதனை நடத்துவதற்கு நம் சமூகம், சமூக அமைப்புகள், அரசியல் தலைகள் ஆகியன எவ்வாறு விவேகமாக செயல்பட வேண்டுமென்பதிலும் நமக்கு ஐயமும், மாற்றுக் கருத்துகளும் இருக்கலாம். ஆனால், திட்டத்தை அரசாங்கம் தெளிவாகவே தெரிவித்திருக்கிறது.

இப்பெருந்திட்டம் முழுமையான ஒன்றல்ல. அதில் பல நிறைகளிருந்த போதிலும், குறைகளும் நிறையவே இருக்கின்றன. அக்குறைகளை அறிந்து, அவற்றைச் சரிசெய்யும் பரிந்துரைகளை முன்வைக்க பேரா. நா. இராஜேந்திரனின் தலைமையில் இயங்கும் குழு பணிக்கப்பட்டது. இப்பணியை இராஜேந்திரன் சரியாகச் செய்தாரா என்பதுதான் நம் சமூகத்தின் முன் நிற்கும் முதற்கேள்வி.

சரியாக செய்திருப்பாரேயானால், அவர் முன்வைத்தப் பரிந்துரைகளில் எத்தனை எந்த அளவிற்கு, எந்த கால வரையெல்லைக்குள் நிறைவேற்றப்படும் என்பன அடுத்து எழும் கேள்விகள்.

முனை. ஆறு. நாகப்பன் அவர்கள் மலேசியக் கல்வி பெருந்திட்டத்தையும், பேரா. இராஜெந்திரன் முன்வைத்த பரிந்துரைகளையும் ஆழ்ந்து அலசக்கூடிய திறன்படைத்தவர் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. அவ்வாறு செய்யும்படி வேண்டுகிறேன்.

இக்கண்,
வே. இளஞ்செழியன்