ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மையும் நீதியும் காக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை உலகெங்கும் எழுந்துள்ளது.
இந்த நேரத்தில் தமிழர்களைக் குழப்பும் வகையில் சில அமைப்புகள் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தக் குழப்பங்கள் தெரிந்தே செய்யப்படுகின்றனவா என்கிற அய்யமும் எழுகின்றது.
1. எது தவறான பிரச்சாரம்?
‘ஈழத்தமிழர்களின் எதிரி அமெரிக்க நாடு’ என்கிற பிரச்சாரமே இன்றைய நிலையில் தவறான திசை திருப்பும் பிரச்சாரம் ஆகும்.
அதுமட்டுமல்லாமல் – இனப்படுகொலையா அல்லது போர்க்குற்றமா? விசாரணையா அல்லது புலனாய்வா? ஐநா சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கையா அல்லது மனித உரிமை ஆணையத் தீர்மானமா? விசாரணை ஆணையமா அல்லது தீர்ப்பாயமா? – என்றெல்லாம் வெவ்வேறு வார்த்தை ஜால குழப்பங்களை அரங்கேற்றுகிறார்கள். இவையெல்லாம் பெரும்பாலும் குழப்பும் நோக்கிலான பரப்புரைகள்தான்.
2. அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் என்ன தவறு?
ஈழத்தில் நடந்த போரை, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து இலங்கை மூலம் நடத்தின என்பது உண்மை. ஆனால், இப்போதைய தருணத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருப்பது இலங்கை மட்டும்தான்.
இலங்கை அரசைத் தவிர வேறு எந்த ஒரு அரசையும் எதிரியாக நினைப்பதோ, அல்லது உலகின் வேறு எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் போராடுவதோ – ஈழத்தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தராது.
(உலக நாடுகளிடம் நியாயத்தை எடுத்துச் சொல்லி ஆதரவு கோரலாம். ஆனால், எதிர்த்துப் போராடுவது தேவையில்லை. அப்படி போராடித்தான் ஆகவேண்டும் என்றால், கியூபா, சீனா, இந்தியா, ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவதே நியாயமாக இருக்கும்).
3. ஐநா தீர்மானம் அயோக்கியத் தீர்மானம் தானே?
அமெரிக்கத் தீர்மானத்தை அயோக்கியத் தீர்மானம் என்று சொல்வதுதான் அயோக்கியத்தனமானது.
அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மான வரைவு – தமிழர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை. அதற்காக அந்த தீர்மானத்தில் எதுவுமே இல்லை என்று சொல்வதோ அல்லது அந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு எதிரானது என்று பேசுவதோ குதர்க்கமான வாதம் ஆகும்.
ஐநா மனித உரிமைப் பேரவையில் இன்னும் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் விருப்பம். அதே நேரத்தில் இப்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைவு தீர்மானம் தவறானது என்று கூறிவிட முடியாது.
இந்த வரைவு தீர்மானத்தை ஈழத்தமிழர்களின் முதன்மை அரசியல் அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் வரவேற்றுள்ளனர்.
4. குழப்ப வேண்டும் என்கிற நோக்கிலேயே அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரம் இருக்கிறதா?
ஆம். உலகில் இனப்படுகொலைக்காக நடத்தப்பட்ட பெருப்பாலான விசாரணைகளில் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என எல்லாமும்தான் விசாரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முதலில் ‘போர்க்குற்றம் என்று சொல்வதே குற்றம்’ என்று குழப்புவதை ஆரம்பித்தார்கள்.
பல மனித உரிமை அமைப்புகள் ‘போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்’ விசாரிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றன. தமிழர் அமைப்புகளும் மிகச்சில மனித உரிமை அமைப்புகளும் ‘போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக்கு விசாரணை வேண்டும்’ என்று கோருகின்றன.
இனப்படுகொலை விசாரணை தேவை என்பது போர்க்குற்ற விசாரணை என்கிற கோரிக்கைக்கு எதிரானது அல்ல.
ஆனால், தமிழ் நாட்டில் மட்டுமே ‘போர்க்குற்றம் என்று சொன்னால் அது இனப்படுகொலை விசாரணைக்கு எதிரானது’ என்று குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
இதனை மேலும் குழப்புவதற்காக ‘ஒருமுறை போர்க்குற்றம் என்று தீர்மானம் கொண்டுவந்தால் அதன்பிறகு அதனை இனப்படுகொலை என்று கூற முடியாது’ என்று புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கூறியது மே 17 இயக்கம்.
“ஐநாவில் எந்த ஒரு தீர்மானம் வந்தாலும் அந்த தீர்மானத்தில் இறுதியாக கடைசி வரியில் THIS IS TO REMAIN SEIZE OF MATTER அதாவது இந்த பிரச்சனையை இதற்கு மேல் விவாதிக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முடித்திருப்பார்கள். இதை போனவருடமோ அல்லது அதற்கு முந்தைய வருடமோ வந்த ஐநாவின் தீர்மானத்தில் பார்த்தால் தெரியும். எனவே ஒரு முறை போர்குற்றத்திற்க்கான விசாரணை என்று வந்துவிட்டால் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்தும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நாம் கோரமுடியாது” – என்றுச் சொன்னது மே 17 இயக்கம்.
ஆனால், உண்மையில் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. THIS IS TO REMAIN SEIZE OF MATTER என்கிற வாசகம் 2012 தீர்மானத்திலோ, 2013 தீர்மானத்திலோ இல்லவே இல்லை.
ஒருமுறை ஐநா மன்றம் முடிவெடுத்தால் – அதனை மாற்றவே மாற்றாது என்பதெல்லாம் குழப்புவதற்காக சொல்லப்பட்டக் கட்டுக்கதைகள். 2009 ஆம் ஆண்டில் இலங்கை அரசினைப் பாராட்டி தீர்மானம் கொண்டுவந்த அதே ஐநா மனித உரிமைப் பேரவையில்தான் 2012, 2013 இல் அதற்கு மாறான தீர்மானங்களும் வந்தன.
5. போர்க்குற்றம் என்றால் இருதரப்பையும் விசாரிப்பார்களா?
2008 – 2009 உள்நாட்டுப் போரில் என்ன நடந்தது என்பதும் அதன் பின்னணி என்ன என்பதும்தான் விசாரணைக்கான கால எல்லையாக பேசப்படுகிறது. அங்கு நடந்த சர்வதேசக் குற்றங்கள் என்ன, அதை செய்தவர்கள் யார் என்றெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேசத்தின் கோரிக்கை.
எனவே ‘நடந்தது என்ன, செய்தது யார்’ என்பதுதான் விசாரணையின் அளவுகோளாக இருக்கும்.போர்க்குற்றம் என்று சொன்னாலும் இனப்படுகொலை என்று சொன்னாலும் – சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது குறித்து எல்லா தரப்பையும்தான் விசாரிப்பார்கள்.
இந்நிலையில் – இலங்கைப் படையினர் குற்றமிழைத்தார்களா என்பதை மட்டும்தான் விசாரிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் தவறிழைத்தார்களா என்று விசாரிக்கக் கூடாது என்று சொல்வது ‘சர்வதேச விசாரணையே வேண்டாம்’ என்று சொல்வதற்கு சமமானதாகும். போரில் ஒரு தரப்பை மட்டும் விசாரிக்கும் நீதி முறை உலகில் எங்கும் இல்லை
தற்போது ஆய்வுகளை மேற்கொண்ட அமைப்புகள் எல்லாம் – மிக அதிக சட்டமீறல்களைச் செய்தவர்கள் இலங்கைப் படையினர், அடுத்தது கருணா படையினர், அதற்கு அடுத்தது விடுதலைப் புலிகள் என்கின்றனர். புலிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படும் பலரும் இப்போது ராஜபக்சேவின் ஆட்களாக இருக்கின்றனர்.
6. அமெரிக்கா எதைச் சொன்னாலும் எதிர்க்க வேண்டும் என்கிற உள்நோக்கம் இருக்கிறதா?
ஆம். அமெரிக்கா எதைச் சொன்னாலும் இவர்கள் எதிர்ப்பார்கள். அதற்கான முன் ஏற்பாடுகளுடன்தான் இருக்கிறர்கள்.
அமெரிக்க தீர்மானம் முன்வைக்கப்படுவதற்கு முன்பாகவே, தமிழ்நெட் இணைய தளம் ஒரு செய்திக்கட்டுரையை வெளியிட்டது. ( Tamils cautioned against word trick of OHCHR ) அதில்”பன்னாட்டு விசாரணை அணையத்தை ஏற்படுத்தக் கோரும் தீர்மானத்தால் பலன் இருக்காது. இதற்கு மாறாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைக்கும் தீர்மானம் வேண்டும்” என்று கோரினர்.
ஆனால், அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தில் பன்னாட்டு விசாரணை அணையம் என்பது கூட இல்லை. எனவே, இப்போது பன்னாட்டு ஆணையம் அமைக்காமல் அமெரிக்கா ஏமாற்றி விட்டதாகக் கூறுகிறார்கள்.
அதாவது, பன்னாட்டு விசாரணை அணையத்தை (Commission of Inquiry) அமைக்கும் தீர்மானத்தை அமெரிக்கா முன் வைத்திருந்தால் – அதனால் பலன் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (international court or a UN special tribunal) ஏற்படுத்த வேண்டும். அதைச் செய்யாமல் அமெரிக்கா ஏமாற்றிவிட்டது என்று இவர்கள் போராடி இருப்பார்கள்.
(சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் ஐநா பாதுகாப்பு அவைக்குதான் இருக்கிறது. அங்கு சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளன)
7. அமெரிக்க தீர்மானம் வராமல் இருந்திருந்தால் சர்வதேச விசாரணையை ஐ.நா கொண்டு வந்திருக்கும்’ என்பது உண்மையா?
இது ஒரு கடைந்தெடுத்தப் பொய். வீணான குழப்பத்தை உருவாக்கும் வாதம். ஐநா நிறுவனங்கள் தானாக எதையும் செய்யாது.
ஐநா பொதுச்செயலருக்கு ஓரளவுக்கு அதிகாரங்கள் உள்ளன. ஆனால், தற்போதைய பொதுச்செயலர் பான் கி மூன் – இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நண்பர், நெருக்கமானவர். எனவே, பான் கி மூன் தானாக ஏதாவது செய்வார் என எதிர்பார்ப்பது ஏமாளித்தனம். பான் கி மூன் கடமைத் தவறினார் எனக்கூறி நியாயம் கேட்க எந்த வழியும் இல்லை.
அமெரிக்காவை எதிர்க்கும் தமிழக போராட்டங்கள்: KFC கடைக்குள் போராட்டம்!
ஐநா அவை என்பது ஒரு அரசியல் அமைப்பு. அங்கு உறுப்பு நாடுகள் வைத்ததுதான் சட்டம்.ஐநா பொதுச் சபை, ஐநா பாதுகாப்புச் சபை, ஐநா மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட அமைப்புகளில் இலங்கையின் குற்றங்கள் எழுப்பப்பட வேண்டுமானால், அதனை உறுப்பு நாடுகள்தான் முன்வைக்க முடியும்.
இவற்றில் ஐநா பொதுச் சபையில் இலங்கை உள்ளிட்ட 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் இலங்கையை எதிர்த்து தீர்மானம் வராது. ஐநா பாதுகாப்பு அவையில் சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளன. அங்கும் இலங்கையை எதிர்த்து தீர்மானம் வராது.
எனவேதான் 47 நாடுகள் உள்ள ஜனநாயக அமைப்பான (யாருக்கும் வீட்டோ இல்லை) ஐநா மனித உரிமைப் பேரவையில் இந்த பிரச்சினை எழுப்பப்படுகிறது.
‘அமெரிக்க தீர்மானம் என்கிற ஒன்று வராமல் இருந்திருந்தால் சர்வதேச விசாரணையை ஐ.நாவின் நிறுவனங்கள் கொண்டு வந்திருக்கும்’ என்று எதிர்பார்த்திருந்தால் – அப்படி ஒரு நிகழ்வு ஒருபோதும் நடக்காது.
இப்படி ஒரு வாதத்தை முன் வைப்பவர்கள் – ஐநா நிறுவனங்களின் மூலம் – எப்படி, யாரால் சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட்டிருக்கும் என விளக்க வேண்டும்.
அமெரிக்கா சரியாக செயல்படவில்லை என்பது உண்மை. ஆனால், அமெரிக்காவை விட்டால், வேறு யாரால் இது நடக்கும் என்பதையும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் விளக்க வேண்டும்.
8. ஐநா விதி 99 இன் கீழ் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனைத் தடுக்க அமெரிக்கா நாடகமாடுகிறது என்பது உண்மையா?
“ஐ.நாவின் விதி எண் 99ன் கீழும் அதன் அதிகாரத்தின் கீழும் தாமாகவே கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டிய சர்வதேச விசாரணையை அமெரிக்காவும், இந்தியாவும் தவிர்த்தார்கள், காலதாமதப்படுத்தினார்கள். இந்தக் கோரிக்கை ஐ.நாவின் விதி. இதை மறுக்க முடியாது என்பதால், சர்வதேச விசாரணையை திசை திருப்ப உள்நாட்டு விசாரணையை கோரினார் பான் கி மூன்” – என்றெல்லாம் பேசுகிறார்கள்.
“ஐ.நாவின் விதிமுறைப்படி (வந்திருக்கவேண்டிய) வரவேண்டிய விசாரணை என்பதை தமிழருக்கான நீதி கிடைக்கும் வழிமுறையாக மாற்ற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அமெரிக்கா-இந்தியா முன்மொழியும் தீர்மானத்தில் சர்வதேச சுதந்திர விசாரணை இலங்கை -விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணையாக வரும் பொழுது, இனப்படுகொலை என்கிற நிலைப்பாடு மறுக்கபடும். தமிழ் இனம் என்கிற ஒன்றினை மறுக்கும் அமெரிக்கா எவ்வாறு தேசிய இனவிடுதலைக்கு அடித்தளமிடும் இனப்படுகொலை விசாரணையை கேட்கும்?” – என்றும் பேசுகிறார்கள்.
ஐநா விதி 99 இன் கீழ் விசாரணை என்பதைக் குறித்து பேசும் முன்பு – ‘விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணை’ மற்றும் ‘தேசிய இனவிடுதலைக்கு அடித்தளமிடும் இனப்படுகொலை விசாரணை’ என்பனக் குறித்த சந்தேகங்களைப் பார்க்கலாம்.
விடுதலைப் புலிகள் மீது விசாரணை
முதலில், நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, ஒரு தரப்பை மட்டும் விசாரிக்கும் முறை என்று எதுவும் உலகில் இல்லை. இரண்டு தரப்புக்கு இடையே போர் நடந்தது, அதில் அரசுத் தரப்பினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. விடுதலைப் புலிகள் மக்களை கேடயமான பயன்படுத்தினர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, போர்க்குற்றம் என்கிற அடிப்படையிலோ இனப்படுகொலை என்கிற அடிப்படையிலோ – சர்வதேச விசாரணை என்கிற ஒன்று நடந்தால் எல்லா குற்றச்சாட்டுகளையும்தான் விசாரிப்பார்கள். ‘எதிர்தரப்பின் குற்றங்களை மட்டுமே விசாரிக்க வேண்டும். எங்கள் தரப்பிலும் தவறுகள் உண்டா என்று பார்க்கக் கூடாது’ என்று கோருவது கேலிக்கூத்தான வாதம் ஆகும்.
எனவே, விடுதலைப் புலிகள் தவறிழைத்தார்களா என்று விசாரிக்கக் கூடாது என்று சொல்வதற்குப் பதில் – இலங்கை இனவெறியர்களைப் போன்று ‘சர்வதேச விசாரணையே வேண்டாம்’ என்று சொல்வது நேர்மையான வாதமாக இருக்கும்.
தேசிய இனவிடுதலைக்கு அடித்தளமிடும் விசாரணை
அடுத்ததாக ‘தேசிய இனவிடுதலைக்கு அடித்தளமிடும் இனப்படுகொலை விசாரணை’ என்று கூறுவதும் ஏன் என்றுத் தெரியவில்லை. இனப்படுகொலை விசாரணை என்று வந்தால்தான் தமிழர்கள் ஒரு இனமாக அங்கீகரிக்கப்படுவார்களா? இல்லையென்றால், தமிழர்கள் ஒரு தேசிய இனம் இல்லையா? இனப்படுகொலை என்று சொன்னாலே, தமிழ் ஈழம் அமைந்துவிடும் பேசுவதன் காரணமோ பின்னணியோ தெரியவில்லை.
சர்வதேசமோ, அமெரிக்காவோ, இங்கிலாந்தோ – உலகின் எந்த ஒரு அரசும் ‘தேசிய இனவிடுதலைக்கு ஆதரவாக’ ஐநா தீர்மானத்தை முன்வைக்கவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவும் நடக்காது. தேசிய இன விடுதலையை நேரடியாக வலியுறுத்தி ஐநாவில் யாரும் எந்த முன்முயற்சியையும் மேற்கொண்டிருக்கவில்லை. இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது குறித்துதான் சர்வதேசம் கேள்வி கேட்கிறதே தவிர, தமிழ் தேசிய இனவிடுதலையில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை.
எனவே, ‘தேசிய இனவிடுதலை’ என்கிற உள்நோக்கத்துடன் சர்வதேச மனித உரிமை அமைப்புகளோ, உலக நாடுகளோ இந்தப் பிரச்சினையை அனுக வாய்ப்பு இல்லை. அவ்வாறு செய்யவேண்டும் என யாரையும் நிர்பந்திக்கவும் முடியாது.
ஐ.நாவின் விதிமுறைப்படி விசாரணை
ஐநா விதி 99 என்பது ‘உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் விடயங்களை ஐநா பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு ஐநா பொதுச்செயலர் கொண்டுவரும் அதிகாரம்’ ஆகும். இது அரிதிலும் அரிதான தருணங்களில் பயன்படுத்தக் கூடிய அதிகாரம். ஐநா அவையின் வரலாற்றில் மூன்று முறை மட்டுமே இந்த அதிகாரம் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டது.
ஐநா விதி 99ஐ இப்போது கோரும் தமிழகப் போராட்டம்
ஐநா விதி 99 இல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், வருமுன் காக்கும் நடவடிக்கையாக, உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலை ஆராய ஒரு விசாரணைக் குழுவை ஐநா பொதுச்செயலர் அமைக்கலாம். இதன்படி 2008 ஆம் ஆண்டின் கடைசியிலோ, 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ, இத்தகைய ஒரு விசாரணையை ஐநா பொதுச் செயலர் நியமித்திருக்க வேண்டும். ஆனால், பான் கி மூன் இந்தக் கடமையில் இருந்து தவறிவிட்டார்.
(பான் கி மூன் கடமைத் தவறியது ஏன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஐநாவின் விஜய் நம்பியாருடைய தம்பி சதீஷ் நம்பியார் ராஜபக்சேவின் ஆலோசகராக இருந்தார். பான் கி மூனுடைய உறவினரான இந்தியர் ஒருவரே ராஜபக்சேவின் கையாளாக இருந்தார் என்று கூறப்பட்டுகிறது. பான் கி மூனே தனிப்பட்ட முறையில் ராஜபக்சேவுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கருதினார். அவர் ராஜபக்சேவுக்கு இணக்கமாகவே இருந்தார்).
பான் கி மூன் கடமை தவறினார் என்பதற்காக, அவரைக் கேள்வி கேட்கவோ தண்டிக்கவோ எந்த வழியும் இல்லை. ஐநா அவையே சார்லஸ் பெட்ரி குழு அறிக்கையின் மூலம் “ஆமாம், ஐநா அவை கடமை தவறியதுதான்” என்று ஒப்புக்கொண்டது. இலங்கையில் நாங்கள் கடமைத் தவறிவிட்டோம். இனி மற்ற நாடுகளில் இதுபோல நடக்காமல் எச்சரிக்கையாக செயல்படுவோம் என்று ஐநா கூறுகிறது.
இப்போது, இலங்கையின் நிலைமை பன்னாட்டு பாதுகாப்புக்கோ, பன்னாட்டு அமைதிக்கோ அச்சுறுத்தலாக இல்லை. எனவே, இனிமேல் ஐநா விதி 99 ஐ பயன்படுத்த வாய்ப்பே இல்லை.
ஐநாவும் ஐநா பொதுச் செயலரும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ள வாய்ப்பு இல்லை. அந்த அமைப்பு ராஜதந்திர வழிகளில்தான் செயல்படும். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கலகங்களில் தலையிட்டுள்ள ஐநா அவை – மூன்று நிகழ்வுகளில் மட்டுமே ஐநா விதியை வெளிப்படையாக பயன்படுத்தியது.
அவ்வாறு விதி 99 இன் கீழ் விசாரணை நடத்தியிருந்தாலும் – அந்த அறிக்கை மீண்டும் ஐநா பாதுகாப்பு அவைக்குதான் போகும். அங்கு இலங்கையின் நட்புநாடுகளான சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளன. அவர்கள் இலங்கை மீதான விதி 99 அறிக்கையைக் குப்பைக்கு அனுப்பிவிடுவார்கள்.
ஐநா அவையில் உச்ச அதிகாரம் படைத்தவர் அதன் பொதுச்செயலர் அல்ல. மாறாக, ஐநா பாதுகாப்பு அவையும், ஐநா பொதுச்சபையும்தான் அதிகாரத்துடன் உள்ளன. அங்கு உறுப்பு நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஐநாவில் நடக்கும் விடயங்கள் முழுக்க முழுக்க சர்வதேச அரசியல் சார்ந்தவையே ஆகும். அங்கு போய் ‘ஐ.நாவின் விதிமுறைப்படி விசாரணை’ என்று கேட்டுக் கொண்டிருந்தால் – அது காணல் நீராகவே முடியும்.
9. தமிழர்களின் உண்மையான எதிரிகள் யார்?
இலங்கை அரசுதான் தமிழ் மக்களின் ஒரே எதிரி. அதனுடன் அந்த அரசைக் காப்பாற்றுவோர் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றன.
துரோகிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இந்தியா.
அடுத்தது கியூபா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிச நாடுகள். முன்றாவதாக இஸ்லாமிய நாடுகள்.
ஆக, இந்தியா, கம்யூனிச நாடுகள், இஸ்லாமிய நாடுகள் – ஆகியனதான் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றனரே தவிர – அமெரிக்காவோ, மேற்குலகமோ தமிழர்களின் எதிரிகளாக இப்போதைக்கு இல்லை.
10. நீதிக்கு துணை நிற்கும் எல்லோரும் நண்பர்களே
ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர ஒரு பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமாக குற்றங்கள் அடையாளம் காணப்பட்டு, பன்னாட்டு குற்றவியல் நீதிவிசாரணை அமைப்பால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – என்பதே எங்களது கோரிக்கை.
அதற்கான திசையில் சிறிதளவேனும் முன்னேற யார் உதவினாலும் அவர்களை நாங்கள் ஆதரிப்போம். அது அமெரிக்காவா அல்லது வேறு நாடா என்கிற வேறுபாடு எங்களுக்கு இல்லை. இலங்கை அரசைத் தவிர உலகில் மற்ற எல்லோரும் நண்பர்களே!
(இந்தியக் குடிமக்கள் என்கிற முறையில் இந்தியாவின் துரோகத்தையும் கண்டிக்கின்றோம், எதிர்க்கிறோம்)
– அருள் இரத்தினம் – http://arulgreen.blogspot.com