மருத்துவர் சண்முகசிவாவின் மருந்திலிருந்தும் … மனத்திலிருந்தும்…

தினமும்

காலையில்

வெறும் வயிற்றில்

மிடறுகிறேன்

சிகிச்சை போல்

நாலைந்து வரி

மொழியை… – கலாப்பிரியா-

dr.shanmugasiva-150x150மருத்துவர் சண்முகசிவா மலேசிய இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். பலதரப்பட்ட துறை சார்ந்த அறிவும் பரந்த வாசிப்பையும் நேசிக்கும் அன்பான மருத்துவர். மிகக் குறிப்பாக அமைதியானவர். அந்த அமைதியே அவரை மொழியை நேசிக்கும் மனிதராக, மானுடத்தையும் மனிதநேயத்தையும் தன் தொழில் எனப் போற்றும் மனிதராக மாற்றியிருக்கிறது.

மிக அண்மையில் மருத்துவர் சண்முகசிவாவின் மருந்திலிருந்தும் … மனத்திலிருந்தும்… என்ற மருத்துவ கேள்வி பதில் நூல் வெளியீடு கண்டது. மருத்துவ கேள்வி பதிலுக்குக்குப் புதியதொரு பொலிவு சேர்த்த நூலாக இந்நூலை கணக்கிலெடுத்துக் கொள்ளலாம். எண்ணற்ற இதுவரை நாம் கடந்த மருத்துவ கேள்வி பதில்களில் இந்நூல் மாறுபடுவதற்கு அதன் மொழியே முக்கிய காரணமாகிறது.

மருந்துவம் என்றால் புரியாத வார்த்தைகள்- நோய் என்றால் பயம் என்ற நிலையை மாற்றி நோய் குறித்த புரிதலே நோயைக் குணமாக்கும் சக்தி கொண்டது என்ற மந்திரக் கலையை நமக்குக் கற்றுக் கொடுகிறார். நோய் குறித்த நோயாளியின் பயமே மருத்துவரின் பலம் என்ற பிம்பத்தை ஒவ்வொரு பதிலிலும் உடைத்தெரிகிறார். நோய் குறித்த புரிதலே மனவலிமையை உண்டாக்குகிறது. மருந்துகளை சிகிச்சையைத் தாண்டி அந்த மனவலிமையே நோயை குணமாக்கும் உறுதியைத் தருகிறது என்ற புரிதலை இந்நூல் நமக்கு ஏற்படுத்துகிறது. உடல் நலம் மட்டுமின்றி மனநலம் காக்கப்பட வேண்டும் என்பதையும் நேரடியாகவோ அல்லது மறைமுகவோ மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

இலக்கியவாதியான ஒரு மருத்துவர் தன் தொழிலுக்கும் தன் மொழிக்கும் ஒரு சேர பங்காற்ற முடியும் என்பதற்கு இந்நூல் நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

கேட்கப்பட்ட கேள்வியை ஒரு மருத்துவராக உள்வாங்கிக் கொண்டு பின் இலக்கியம் பேசும் மருத்துவராக அதற்குப் பதில் தருகிறார். இதுதான் நோய்- இதுதான் காரணிகள் என்பதைத் தாண்டி இந்த காரணிகளுக்கு உகந்த நிவாரணங்களும் தருகிறார் இளஞ்சூட்டில் ஒத்தடம் தருவது போல். மருத்துவர் எடுத்தாண்டிருக்கும் கவிதைகளை வாசிக்கும் போது மனம் லேசாகிறது. சில நிலைகளில் கண்களின் ஓரம் ஈரம் கசிகிறது. தவறுகள் புரிபடுகிறது. கசியும் ஈரத்தில் கசடுகள் கழுவப்படுகிறது.

நன்னெறிகளை அறிவுரைகளாக நம்மில் பெரும்பாலோரிடம் அது எடுபடுவதில்லை. நோயின் உக்கிரத்தின் ஒரு மருத்துவரால் கூறப்படும் எல்லாமே வேதவாக்கின்றன. வலி நம்மை வதைக்கும் நேரம் அதிலிருந்து எப்படியாவது வெளியாக வேண்டும்  என்பது மட்டுமே நமது குறிக் கோளாகிறது.

பெரும் செலவில் யாகம் செய்வதால் மட்டுமே புண்ணியம் வந்துவிடும் என்று நான் நம்பவில்லை. பிறருக்காக தியாகம் செய்வதால்தான் அது கிடைக்கும் என நம்புகிறேன்.

இதை ஒரு பொதுபரப்பில் நின்று கொண்டு சொன்னால் சும்மா விடுவீர்களா! ஆனால், இந்த நூலில் அதை சொல்கிற அது யோசிக்க வைக்கிறது. மலைபோல் பாவங்களைச் செய்து நோய் வந்தப் பிறகு யாகம் செய்தால் சரியாகிவிடுமா என்ன!

இந்த பதிலையும் படித்துப் பாருங்கள்.

எச்சமிடக்

கூடுமென்னும்

எச்சரிக்கையில்

ஜன்னல் வந்தமரும்

சிட்டுக் குருவியை

ச்சூவென விரட்டி விட்டு

டிஸ்கவரி சேனலில்

பறவையை ரசி. யுகபாரதி

 இந்தக் கவிதையைப் பாருங்கள். நம் வீட்டு ஜன்னலில் அமரும் சிட்டுக் குருவியை விரட்டிவிட்டு> தொலைக்காட்சியில் பறவைகளைப் பார்த்து இரசிக்கும் மனிதர்களாகி விட்டோம்.

மிக எளிய மொழி. யாரையும் புண்படுத்தாத வார்த்தைகள். ஆனால், அதுதானே நிதர்சனம். இதை படித்து முடிக்கும் போதும் மனதில் மேலெழுந்து இம்சித்துக் கொண்டிருக்கும் அந்த உணர்வையும் நான் அப்படியானவனா என்ற சுயமதிப்பிடலையும் தவிர்க்க முடியவில்லை தானே? அதுதான் இந்த நூலின்,  நூல் தனக்குள்ளே தேக்கி வைத்திருக்கும் மானுடத்தின் வெற்றி என நான் நினைக்கிறேன்.

கடந்தாண்டு இறுதியில் வெளியீடு செய்யப்பட்ட 800 பக்கங்களுக்கும் மேலான குவர்னிகா – 41வது இலக்கிய சந்திப்பு மலரில் ‘மனித விடுதலைப் போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று’ என்ற தலைப்பிலான மருத்துவர் சண்முகசிவாவின் நீண்ட செறிவான நேர்;க்காணலும் இடம்பெற்றிருந்தது. அதில் ‘ அறிவியல் – கலை எனும் முரண் இயக்கங்களில் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள் என்ற கேள்விக்கு மருத்துவர் சண்முகசிவா இவ்வாறு பதிலளித்திருந்தார். ‘இலக்கியமும் மருத்துவமும் இருவேறு மாறுபட்ட துறைகளாக தோன்றினாலும் அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான். இரண்டின் மையப்புள்ளியும் ‘மனிதன்’ அவனது ‘வாழ்வு’ என்பதிலிருந்துத் தொடங்கி பின் விரிவடைகிறது என்கிறார். இரண்டின் குவிமையமும் ‘Human Behaviour’’ எனப்படும் மனித மனமும் அதன் செயல்பாடும் பற்றியதுதானே என்கிறார்.

எவ்வளவு முக்கியமான உண்மை. மனிதமும் அவனது வாழ்வும் தானே அனைத்திற்கும் காரணமாக அமைகிறது. இதைத்தானே மீண்டும் மீண்டும் தன் பதில்கள் மூலமாகவும் எடுத்தாண்டிருக்கும் கலிதைகள் மூலமாகவும் மருத்துவர் சண்முகசிவா நிறுவிக் காட்டுகிறார்.

ஒரு கேள்வி இப்படியாக கேட்கப்படுகிறது.

‘எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். நாங்கள் இரட்டை பிள்ளைகள். என் அண்ணனுக்கு நோய் இருக்கிறது. நாங்கள் இருவரும் நீண்ட காலமாக பேசிக் கொள்வதில்லை. அதனால் அந்த நோய் எனக்கு பரவியிருக்காது. நானும் அந்த நோயை இருக்கிறதா என சோதனை செய்துக் கொள்ள வேண்டுமா என்பதாக கேள்வி இருக்கிறது. அதற்கு மருத்துவர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய பிறகு இப்படி சொல்கிறார்.

‘அவரோடு நீங்கள் பேசிக் கொள்வதில்லை என்பது எனக்குச் சம்பந்தமற்ற பிரச்சனை என்று என்னால் ஒதுங்கிக் கொள்ள இயலவில்லை. நோயுற்றிருக்கும் உங்கள் அண்ணனைச் சென்று பாருங்கள். கருவறை வாசயை நினைவு கூருங்கள். அரை நிமிடம் அவரைக் கட்டித் தழுவுங்கள். மனதின் அழுக்கு, வக்கிரம், வெறுப்பு எல்லாம் மறைந்துவிடும். அப்பழுக்கற்ற அன்பு அங்கே மேலெழக் காத்திருக்கும். அதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்’ என்கிறார்.

நோய்க்கான மருந்து பணம் இருந்தால் கிடைத்துவிடும். ஆனால், இப்படியான மனதை வருடும் மானுடம் பேசும் பதில்கள் கிடைப்பது மருத்துவர் சண்முகசிவா மூலம் நாம் பெற்றிருக்கும் மிகச் சிறந்த வாய்ப்பு.

இந்நூல் மனோவியல் பேசுகிறது. பொதுமருத்துவம் பேசுகிறது. இதயம்,  காது, மூக்கு, தொண்டை,  தோல்,  வயிறு,  கண், சிறுநீரகம் என உறுப்புகள் குறித்து பேசுகிறது. மகளிர்,  குழந்தை குறித்தும் அலசுகிறது. ஒரு அடிப்படையான மருத்துவ அறிவினை வழங்கும் பணியை இந்நூல் செய்து போகிறது. மிகக் குறிப்பாக, மருத்துவம் பேசி பணம் பண்ணுதலைத் ஒரு பக்கம் வைத்து விட்டு மானுடம் சமைக்கும் இலக்கியத்தையும் இந்நூல் பேசுகிறது.

தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள கவிதை போன்றுதான். இந்த நூல் ஒரு சிகிச்சை போன்று மொழியையும் கவிதைகளையும் மானுடத்தையும் அறத்தையும் நமக்குள்ளே ஒரு மருந்தென வழங்கிப் போகிறது. உடல் நோவுக்கு மருந்தையும்,  மன நோவுக்கு மயிலிறகின் வருடலாய் கவிதை மொழியையும் ஒரு சேர வழங்கியிருக்கும் நூல் ஒரு சீரிய முயற்சி – மேலும் பல பதிப்புகள் வெளியிடபட வேண்டும் என்பதே நமது அவா.

பூங்குழலி வீரன் – நன்றி :- விழித்தெழு