இருமொழிப்பயன்பாடு தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நன்மை தரும். கல்வி சமூக நல ஆய்வு அறவாரியம் கருதுகிறது

tamil school children1இருமொழி பயன்பாடு ஒரு பரிசார்த்த நிலையில் 300 தேசிய ஆரம்ப/இடைநிலப்பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதில் தமிழ் சீன பள்ளிகள் இணைத்துக்கொள்ளப்படவில்லை.தமிழ் சார்ந்த அமைப்புக்களின் கருத்து என்னவாக இருக்கும் , அவற்றின் நிலைப்பாடு என்ன என்பதனை கணிப்பதற்காகவே  சென்ற சனிக்கிழமையன்று ஆய்வரங்கு ஒன்று பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில்  நடைபெற்றது. இதனை தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத்திட்ட வரைவு குழுவின் தலைவர் டத்தோ என் எஸ் ராஜேந்திரன் வழி நடத்தினார்.

தேசிய கல்விப் பெருந்திட்டத்தில் தமிழுக்கும் சீனத்திற்கும் எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. அக்கல்வித்திட்டத்தின் நோக்கமே மலாய் மொழியை மேம்படுத்துவது ஆங்கிலத்தை வலுப்படுத்துவதும்தான் .அந்த திட்டத்தின் தொடக்கம்தான் இந்த இரு மொழித் திட்டம்.

இதன் விளைவு என்னவாகும் ?

கணிதம் அறிவியல் மற்ற இரு பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால் அதனால் பயனைடயப்போவது தேசிய பள்ளிகள் மட்டுமே. தமிழ் சீன பள்ளி மாணவர்கள் தத்தம் தாய் மொழியிலேயே கணித அறிவியல் பாடங்களை பயின்றுவிட்டு இடைநிலப்பள்ளிகளுக்கு செல்லும்போது தேசிய பள்ளியிலிருந்து வரும் மாணவர்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இன்னொன்று , தேசியப்பள்ளிகளில் ஆங்கில மொழி 300 மணித்துளிகள் , தமிழ்ப் பள்ளிகளில் அது வெறும்150 மணிதுளிகள்தாம் பொதிக்கப்படுகின்றது..இந்த இரு மொழிக் கொள்கையால் தேசிய மொழிப்பள்ளிகளுக்கு தமிழ்ப் பள்ளிகளைவிட  ஒரு படி மேலேயே நன்மை இருக்கிறது. ஆங்கில மொழியை அதிக நேரத்துடனும் பயில்வதோடு மட்டும் இல்லாமல் கணிதம் அறிவியல் பாடங்களையும் அவர்கள் ஆங்கிலத்திலேயே பயில்வதால் , இடை நிலைப்பள்ளிக்கு போகும் போது அவர்களுடைய ஆங்கில மொழி ஆற்றல் தமிழ்ப் பள்ளி மாணவர்களைவிட அதிகம் இருக்கும் என்பதை மறுக்கமுடியாது.

தமிழ்ப் பள்ளியில் படித்து புகுமுக வகுப்பில் இருந்தது  உயர் கல்வியைத்த் தொடர்ந்த மாணவன் என்ற முறையில் என்னுடைய சொந்த அனுபவமே எனக்கு ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. முதன் முதலாக ஆங்கிலப்பள்ளியில் சேர்ந்த போது கூச்சம் , தாழ்வு மனப்பான்மை, முக்கிய காரணம் போதிய ஆற்றலை  ஆங்கிலத்தில் பெற்றில்லாத்ததே! இது போன்ற கஷடங்களை இன்றைய மாணவர்கள் படக்கூடாது என்பதற்காகவே நாம் இந்த திட்டத்தை நாம் வரவேற்கவேண்டும்.

பெற்றோர்களின் நிலைப்பாடு

நாம் எவ்வளவுதான் ஒன்று சேர்ந்து கருத்துக்களை பரிமாறி இதுதான் தமிழ்ப் பள்ளிகளுக்கு நல்லது என்று பரிந்துரைத்தாலும் இறுதியில் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புவதா இல்லையா என்ற முடிவு  பெற்றோர்களின் கையில்தான் உள்ளது.

மேற்கூறிய காரணங்களுக்காக பெற்றோர்களின் தேர்வு மலாய் பள்ளிகள் பக்கமே சாரும் என்று கூறலாம். குறிப்பாக மேல் மட்ட, படித்த இந்தியர்கள், தமிழ்ப்பள்ளிக்கு போடலாமா இல்லையா என்று மதில் மேல் இருக்கும் பூனை போல  உள்ள பெற்றோர்கள் இந்த சாதக பாதகங்களை சீர்தூக்கி பார்ப்பார்களேயானால்  நிச்சயம் அவர்களின் தேர்வு தமிழ்ப்பள்ளிகளாக இருக்காது.

பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பவில்லையென்றால் தமிழ்ப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை குறையும், தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும் குறையும்.

இதுதான்  கல்விப்பெருந்திட்டதின் நீண்ட கால நோக்கம். தமிழிப்பள்ளிகளை மூடசொல்லாமல் மூடவைக்கும் வித்தை இது.

இதிலிருந்து நாம் எப்படி தப்பிப்பது?

கல்வி பெருந்திட்டத்தின் உள் நோக்கிற்கு  பணிந்து வாளாவிருக்கலாமா? அல்லது போராடி அந்த இரு மொழி திட்டத்தில் நம் பள்ளிகளையும் ஈடுபடச்செய்து நம் மாணவர்களை தேசிய பள்ளி மாணவர்களுக்கு இணையாக அல்லது மேலாகக் கொண்டு செல்லலாமா? நாம் இப்போது  செய்ய வேண்டிய முக்கியமான முடிவு இது.

இது 2003 ல் மகாதீர் அறிமுகப்படுத்திய திட்டத்தில் கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்ட போது அதிகமான மாணவர் எண்ணிக்கையை தமிழ்ப்பள்ளிகள் பெற்றிருந்தன.மாணவர்களின் யு பி எஸ் ஆர் தேர்வு நிலையும் திருப்தியளிக்கும் வகையில் இருந்தது.2012ல் அது கைவிடப்பட்டபின் , மாணவர் எண்ணிக்கை வீழ்ந்தது, தேர்வு நிலையும் சரிந்தது. இது நாம் எல்லோரும் பெற்ற அனுபவம்.

இந்த இரண்டு காரணங்களுக்காகவே மட்டும் இந்த இரு மொழி திட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும். இதனால் அதிகமான இந்தியப் குழந்தைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு ஈர்க்க வாய்ப்புண்டு. மாணவர் எண்ணிக்கையும் பெருகும்.தமிழ்ப்பள்ளிகளின் என்ணிக்கையாவது குறையாமல் இருக்கும்.

தொடக்க கல்வியை தாய்மொழியில் கற்பதுதான் மொழி வளர்ச்சிக்கும் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் உகந்தது என்கின்ற யுனெஸ்கோவின் கருத்தை மறுப்பதற்கில்லை.ஆனால் நாட்டில் உள்ள அரசியல் சூழல், கல்விக் கொள்கை , இந்தியர்களின் சமூக பொருளாதார நிலைமை , நம் மாணவர்களின் எதிர்காலம் இவற்றை கவனத்தில் கொண்டு ஒரு வித சமரச நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.ஜப்பான் , பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் பிள்ளைகள் ஆரம்பப் பள்ளிகளில் தாய்மொழியிலே பயின்று சிறப்பாக இல்லையா ? நாமும் அதை பின்பற்றலாமே என்றால், அங்கு அவர்கள் ஆரம்பப்பள்ளியில் ஆரம்பித்து  பல்கலைக்கழகம் வரை  அவர்கள் தாய்மொழியிலேயே கல்வியைத் தொடருவதால் தாய் மொழி அவர்களுக்கு கை கொடுக்கிறது. நாமோ வெறும் 6 வருடங்கள் தமிழ்க்கல்வி , அதன் பிறகு பல்கலைக் கழகம் வரை பயன்படுத்தப்போகும் தொடர்பு மொழி மலாய் அல்லது ஆங்கிலம். ஆங்கிலத்தை ஆரம்பப் பள்ளிகளிலேயே நாம் பயிலத் தொடங்கினால் நம் மாணவர்கள் இடை நிலைப்பள்ளிக்கு போகும் போது சுலமாகவும் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை இணைத்தும் கொள்வார்கள். இது அவர்களின் போட்டி ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வெகுவாக அதிகரிக்கும். இப்பொழுது உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு  ஆங்கில ஆற்றல் வேண்டும் என்று நினைகிறார்கள். மற்ற நாடுகளைப்போல்அல்லாமல் நாம் தமிழில் கற்ற அறிவியியல் சொற்களையோ தொழில் நுட்பதொடர்புடைய சொற்களையே ஆராம்பக் கல்விக்கப்பால் நாம் பயன்படுத்துவதே இல்லை..

இன்றைய நமது இளைஞர்கள் பட்டப்படிப்பு அல்லது முனைவர் பட்டம் படித்தப் பின்னரும் ஆங்கிலத்தில் முறையாக  நான்கு வாக்கியங்களை பேசமுடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். இது எல்லாம் அவர்கள் குறையல்ல. ஆங்கிலமொழி பயிற்றுவித்தல் ஆரம்பத்திலேயே இல்லாததனால் வந்த வினை எனலாம். இந்த இரட்டை மொழி பயன்பாடு இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையலாம்.

.அறிவியலும் கணிதத்தையும் தமிழை விட ஆங்கிலத்தில் பயில்வதுதான் சிறந்தது என்பது நமது வாதமல்ல. மலாய் பள்ளிகளுக்கு வரும் வாய்ப்பை நாம் ஏன் பயன் படுத்திக்கொள்ளக்கூடாது என்பதுதான் நமது கேள்வி. நமது மாணவர்கள் அறிவியலிலும் கணிதத்திலும் மேலும் சிறந்த ஓங்க இது வாய்ப்பாக அமையும்.அரசாங்கமே இந்த ஆங்கில மொழியின் அவசியத்தை உணர்ந்து மலாய் மொழி பற்றாளர்களின் எதிர்பையும் மீறி இந்த திட்டத்தை அமல் படுத்த விழையும் போது, வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில்  நாமும் அதை ஏன் பின்பற்றக்கூடாது ?

கணிதம் அறிவியல் போன்ற பாடங்கள் ஆங்கிலம் வழி போதிக்கப்பட்டால், மற்ற இன ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு வர வழி வகுக்குமே என்று அஞ்சினால்,தமிழ்ப் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பயிற்சி பெற்றவர்களாக இருப்பதை கல்வி அமைச்சு உறுதிசெய்யவேண்டும்  என்ற கோரிக்கையை நாம்  முன் வைக்கலாம்.

இந்த வாய்ப்பு வருமா இல்லையா என்பது ஒரு கேள்வி . அப்படி அவ்வாய்ப்பு வழங்கப்பட்டால் நம்முடைய ஒருமித்த நிலைப்பாடு என்ன என்பது அடுத்த கேள்வி. இந்த இரண்டாவது கேள்விக்கான பதிலாகா அமைந்ததுதான் அன்றைய கருத்தாய்வுக் கூட்டம்.இக்கூட்டத்தில் பெரும்பாலனோர் இந்த இருமொழி கொள்கையை ஆதரிக்கும் பட்சத்தில் இதன் பரிந்துரைகளை பிரதமரிடம் சமர்பிக்கவிருப்பதாக டத்தோ என் எஸ் ராஜேந்திரன் கூறினார். பூசாரி தயவின்றியே கருவரைக்குச் செல்லும் வாய்ப்பு நமக்கு செடிக் மூலாமாக கிடைத்திருக்கின்றது. இந்த வாய்ப்பை நாம் நம் மாணவர்களின் வளர்சிக்காகவும் தமிழ் பள்ளிகளின் நிலைத்தன்மைக்காகவும் பயன் படுத்திக் கொள்வோமாக .

– கோவிந்தசாமி அண்ணாமலை,

உதவித் தலைவர்,

கல்வி சமூக நல ஆய்வு அறவாரியம்