சிலிம் ரீவர் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கு எப்போது விடிவு பிறக்கும்?

“சிலிம் ரீவர் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி முழு அரசு மானியம் பெறும் ஒரு தமிழ்ப்பள்ளி என்றாலும் இப்பள்ளி அனைத்து நிலையிலும் ஒதுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளியாகவே உள்ளது” என மனம் குமுறியிருக்கிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சாந்தி.

இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் ஏற்பாட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் மனம் நொந்து பேசியிருக்கிறார் தலைமையாசிரியர் திருமதி சாந்தி. இந்நிகழ்வில் தமிழ்ப்பள்ளிகளின் தேசிய அமைப்பாளர் திரு. பாஸ்கரன் மனிதவள அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம், தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கா சுவான், கே. ஆர். நாயுடு ஆகியோர் முன்னிலையில் அப்பள்ளியின் ஒட்டுமொத்த அவலங்களையும் அள்ளி இறைத்துவிட்டார் தலைமையாசிரியர் திருமதி சாந்தி அவர்கள்.

இத்தனைக்காலம் மஇகாவினரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் கண்ணாமூச்சா விளையாடிக் கொண்டிருந்தனர்?

முழுமையாக அரசின் மானியம் பெறும் ஒரு தமிழ்ப்பள்ளிக்கே இந்த நிலைமை என்றால் மானியம் பெறாத தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை என்ன என்பதை சொல்லவும் வேண்டுமா?

அரசாங்கம் கொடுக்கும் மானியங்கள் எங்கே யாருக்குப் போய்ச் சேருகின்றன. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். தமிழ்ப்பள்ளிக் கூடங்களுக்குக் கொடுக்கப்படும் மானியங்கள் முறையாக பள்ளியின் செயல்பாடுகளுக்குப் போய்ச் சேருகிறதா என்பதை கல்வி அமைச்சும் அரசும் கண்டிப்பாக கவனித்திருந்தால் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட வாய்ப்பில்லை. வேலியே பயிரை மேய்கின்ற கதைகள் நிறையவே கேள்விப்படுகிறோம். அப்படி ஏதாவது…

மின்விசிறிகள் கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆசிரியர் அறைகள், கதவுகள் பழமையான நீர்குழாய்கள், 20 ஆண்டுகள் வர்ணம் தீட்டப்படாத பள்ளிக்கூடங்கள்.

இப்படி எல்லா நிலையிலும் அவலமாய்க் கிடக்கும் இந்தப் பள்ளியின் சூழல் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசு மானியம் பெறும் பள்ளியின் உண்மையான நிலை இதுவென்றால் வழங்கப்படும் மானியம் எங்கே போகிறது?

சிலிம் ரீவரில் உள்ள இந்தத் தமிழ்ப்பள்ளியில் 280 மாணவர்களையும் 21 ஆசிரியர்களையும் 7 பணியாளர்களையும் கொண்டு செயல்படும் ஒரு பள்ளியின் நிலை இப்படியா இருக்க வேண்டும் 21 ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் என்ன செய்து கொண்டிருந்தன.

முழு அரசு மானியம் பெறும் ஒரு தமிழ்ப்பள்ளி இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது வெட்கக்கேடான ஒரு விஷயம்.

மனிதவள அமைச்சர் டாக்டர் சுப்ரமணியமும் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் பாஸ்கரனும் அந்தத் தொகுதி மஇகாவினரும் என்ன கதைவிடப் போகிறார்கள்?

இந்தத் தமிழ்ப்பள்ளியின் மோசமான சூழலுக்கு யார் காரணம்?

அரசு மானியம் எங்கே போகிறது?

இந்தப் பள்ளியின் இன்றைய நிலையை பொதுவுக்குக் கொண்டு வந்த ஆசிரியர் திருமதி சாந்தி அவர்களை பாராட்டும்; அதேவேளை இத்தனைகாலம் நீங்களும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

சா. சூரியன்
கம்போங் பண்டான்