‘ஞாயிறு’ நக்கீரன் – கோலாலம்பூர், செப்.23: மலேசியக் கூட்டுச் சமுதாயத்தில் மனிதத் தவறு நிகழும்போதெல்லாம்.. மாணவர்களும் இளைஞர்களும் குற்றச் செயலில் ஈடுபடும்பொழுதெல்லாம் வல்லடியானவர்கள் காலாடித்தனம் புரியும்பொழுதெல்லாம் ஒரு சிலத் தரப்பினருக்கு இப்படிச் சொல்வதும் அறிக்கை விடுவதும் வழக்காகிவிட்டது. மக்களுக்கு ‘சமய சிந்தனை போதவில்லை’, இளைஞர்களுக்கு ‘சமய சிந்தனை போதவில்லை’, என்பதுதான் அது. அண்மைக் காலமாக நம் நாட்டு கூட்டு சமுதாயத்தைத் தொற்றிக் கொண்டுள்ள இத்தகையப் போக்கு உடனே மாற வேண்டும்.
உண்மையில் சமய சிந்தனை என்பது அனைவருக்கும் போதும்; அதிகமாகவே உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் தேவையானதெல்லாம் நன்னெறிப் பண்பு நலனும் ஒழுக்க மேன்மையும்தான்.
மலேசியத் திருநாட்டைப் பொறுத்தமட்டில், சமயப் பாத்திகளுக்கு நன்றாக நீர் பாய்ச்சப்படுவதால், சமயப்பாத்திதோறும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மண்ணில் ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை சமயம் அவனை இடைவிடாடமல் பின்னிப் பிணைந்துள்ளது. இடைப்பட்ட வாழ்க்கையில் உறக்கத்திலும்கூட மத சிந்தனை ஒவ்வொரு மனிதனோடும் இணைந்தே பயணிக்கிறது. மொத்தத்தில் சமயம் செழிக்கவும் சமயப் பயிர் நன்கு தழைக்கவும் இந்த மண்ணும் மண்வாழ் மக்களும் மண்ணையும் மக்களையும் ஆளும் அரசும் ஒன்றாக கைகோத்து நன்றாக செயல்படும் நிலையில், திகட்டும் அளவிற்கு சமய சிந்தனை சமுதாயத்தை ஆட்கொண்டுள்ளது.
மாறாக, மாந்த நேயம், தனி மனித பண்பு நலம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியன வளர வேண்டிய பண்பாட்டுப் பாத்திகள்தான் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால், ஈதலுடன் இசைபட வாழ்ந்த முந்தைய நிலை மாறி, பொச்சரிப்பும் அபகரிப்பும் மலிந்து சமுதாயத்தில் பொல்லாங்கு பெருகிவிட்டது.
அதனால்தான் வழிபாட்டு தலத்திலேயே கொள்ளை நடக்கிறது; மாணவர்கள் மட்டம் போடுகின்றனர்; மதுவையும் புகையையும் துணை கொண்டு பிஞ்சிலேயே வெம்ப முனைகின்றனர்; கல்லூரி வாசலை மாணவர்களோடு சேர்ந்து போதைப் பொருளும் கடக்கிறது; இது வரை வளர்த்து ஆளாக்கியப் பெற்றோரையும் நாளைய வாழ்க்கையையும் எண்ணி எண்ணி கண்ணும் கருத்துமாகப் படிப்பதற்குப் பதிலாக ஆண்களுடன் போட்டியிட்டு மாணவியரும் போதைப் பொருள் பாவனைக்கு தலைப்பட்டுள்ளனர்.
இத்தனைக்கும் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளும் அத்தனை பேரும் சமயத்தை இருகப் பற்றி வாழ்பவர்கள்தான். இன்னுஞ்சொல்லப்போனால், தான் மட்டும் வாழ வேண்டும் என்று இறைவனிடமே கோரிக்கை வைக்கும் அளவுக்கு மதம் மனிதனை மாற்றியும் வைத்திருக்கிறது.
‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம், உயிரினும் ஓம்பப் படும்’ – என்னும் குறட்பா, திருக்குறளில் 131-ஆவது குறளாகும். அறத்துப்பாலில் இல்லறவியலில் ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் முதல் பாடலாக இடம்பெற்றுள்ள இக்குறள், ஒழுக்கமும் நற்பண்புமே ஒருவருக்கு மேன்மையையும் சமுதாயத்தில் மதிப்பையும் தருவதால் அவற்றை மாந்தர் யாவரும் தம் உயிரைவிட மேலானதாகப் போற்ற வேண்டும் என்கிறது; அத்துடன் அதன்படி ஒழுகவும் வேண்டுமென நமக்கெல்லாம் சொல்லித்தரும் திருக்குறளையும் அதனைச் சமைத்த திருவள்ளுவரையும் நாமெல்லாம் மறந்துவிட்டோம். குறிப்பாக புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களும் மாணவர்களும் அடியோடு மறந்து விட்டனர்.
எந்த நாட்டையோச் சேர்ந்தவன் இந்த நாட்டில் கடை பரப்பி கல்லாப் பெட்டியுடன் அமர்ந்திருக்க, இந்த நாட்டில் பிறந்தவன் கைப்பையைப் பறிப்பதற்கு குறிவைத்துக் காத்திருக்கிறான். கேட்டால், அரசு உதவவில்லை; வேலையும் கொடுக்கவில்லை என்கின்றனர். போதாக்குறைக்கு சும்மா இருக்க முடியாத சிலர் ‘இளைஞர்களுக்கு சமய சிந்தனை போதவில்லை; அதனால்தான் தவறான வழிக்குச் செல்கின்றனர்’ என்று சொல்லி அவர்களுக்கு முட்டு கொடுக்கின்றனர்.
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் பழைமைமிக்க சமயங்களைப் பின்பற்றி வாழும் நாம், இன்னும் எத்தனைக் காலத்திற்கு இப்படியே சொல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கப்போகிறோம்.
வாடிக்கையாளரின் பணத்தை காக்க வேண்டிய வங்கி ஊழியரே பணத்தை அபகரிக்க; பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு பிள்ளைகள் அனுப்பி வைக்க; நான்காம் படிவத்தில் படிக்கிறவன் மூன்றாம் படிவத்தில் பயிலும் மாணவியைத் தாயாக்க; போதைப் பொருளை மாணவிகள் கல்விச் சாலையிலேயே பரிவர்த்தனை செய்ய; பள்ளிக்கு மட்டம் போடும் மாணவர்கள் பகை கொண்ட மாணவர்களை உயிரோடு எரித்துவிட; நாட்டிலுள்ள அத்தனைத் தாய்மாரும் தன் பிள்ளை நல்லவன்தான், அவனை மற்ற பிள்ளைகள்தான் கெடுக்கின்றனர் என்று அடுத்தத் தாயையும் அவர் பெற்ற பிள்ளையையும் காலமெல்லாம் பழிசொல்ல; மாணவர்களிடமே இன பேதமும் சமய பேதமும் பளிச்சிட; கணவனுக்கு மனைவி துரோகம் இழக்க, மனைவியும் கணவனின் இரண்டகத்திற்கும் வஞ்சனைக்கும் ஆளாகும் நிலை யெல்லாம் எங்கும் எந்நேரமும் நிலவுகிறது.
மொத்தத்தில், இவ்வளவையும் செய்யும் மனிதனிடம் சமய சிந்தனை இல்லை என்றா சொல்ல முடியும்? நிறைய இருக்கிறது மத சிந்தனை! மாறாக, ஆன்றோரும் சான்றோரும் சொல்லி வைத்த நன்னெறியும் ஒழுக்கமும் நேர்மையும்தான் சமுதாயத்தில் தொலைந்து விட்டது.
இன்று உலகில் நடக்கும் அத்தனைத் துன்பத்துக்கும் கொடுமைக்கும் தவறுக்கும் மனித உரிமை மீறலுக்கும் அடிப்படைக் காரணம் மதமும் அம்மதத்தைப் பின்பற்றும் மனிதனும்தான்.
மொத்தத்தில் மதத்தைத் தழுவிக் கொண்டே பிறக்கும் மனிதன், மதத்தோடு வளர்ந்து மதத்தோடு வாழ்ந்து மடிந்த பின்னும் மதம் அவனைவிட்டு விலாகாமல் ஒட்டிக் கொள்கிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க, மனிதன் நல்ல விதமாக வாழ ஒழுக்கமும் நல்ல சிந்தனையும் பரந்த நோக்கமும்தான் வேண்டும் என்பதை ‘சமய சிந்தனை போதவில்லை’, ‘சமய சிந்தனை போதவில்லை’ என்போர் இனியாவது மனதிற்கொள்ள வேண்டும்.
உண்மைதான்…. தியானம், யோகா மற்றும் ஆன்மிகம் அனைத்தும் அறிவியல் மற்றும் நன்னெறி பண்பு என்று மறந்து அனைத்தும் மதம் என்கிற எண்ணம் இருக்கிறது…. இவை அனைத்தும் மாறுதலுக்கு உட்பட வேண்டும்.. அப்பொழுதுதான் அணைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ முடியும்… அன்பே சிவம் என வாழ்வதே சால சிறப்பு..
#உண்மையில் சமய சிந்தனை என்பது அனைவருக்கும் போதும்; அதிகமாகவே உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் தேவையானதெல்லாம் நன்னெறிப் பண்பு நலனும் ஒழுக்க மேன்மையும்தான்.#
‘சமயம்’ என்றால் என்னவென்பதைப் புரிந்து கொள்ளாமல் கட்டுரை வரைவது வியப்பாக உள்ளது.
ஒவ்வொரு சமயக் கோட்பாடுகளின் அடிப்படையே அற வாழ்க்கையைப் பேணி வாழ வேண்டுமென்பதாகும்.
இதில் சைவ சமயம் அறம், பொருள், இன்பம் அதன்வழி வீடுபேறு என்று கூறும். இதை நம் மூதாதையர் வழிமுறையாக நமக்குப் பயிற்றுவிக்காததால் சமயம் என்றால் திருக்குறளில் கூறப்படும் அற வாழ்க்கையையும், நற்பண்புகளையும், ஒழுக்கங்களையும் பேணி வாழ்வது முதற்கடன் என்பதை நம் இனம் மறந்து வெகு நாளாகி விட்டது. அறமில்லாத சமய வாழ்க்கை இல்லை என்பதை அறிந்து எழுதுங்கள்.
கட்டுரையாளரின் சமயத்தைப் பற்றிய கண்ணோட்டம் அறியாமையில் கூறப்பட்டடுள்ளதைக் காண்கையில் வருத்தமளிக்கின்றது.
ஹனுமான் பிறவியிலேயே மிக ஆற்றல் பெற்றவர்,ஆயினும் அறம் தெரியாது மோத கூடாத இடத்திலயெல்லாம் மோதி சர்வ ஆற்றல் எல்லாம் இழந்தார் பின் வேதங்களை சூரிய தேவனிடம் பயின்றார் பின் ராமர் பாதம் சேர்ந்தார்,புகழ் பெற்றார்.திருக்குறள் கடவுள் தத்துவம் சொல்கிறது ஆனால் யார் கடவுள் சொல்லவில்லை.அறத்துப்பாலில் இறுதியாக ஊழ் என்று முடித்தார்.விதி அனுமதிக்க வேண்டும் என்று முடிக்கிறார்.திருக்குறளில் எல்லா ஒழுக்கமும் உணர்தல் போதாது , இறை பக்தி பூரணத்தை கொடுக்கும் .