‘ஞாயிறு’ நக்கீரன்
மக்கள் எழுத்தாளர் அ.கந்தன் தீட்டிய சிறுகதைத் தொகுப்பு நூலான ‘உரிமைப் போராட்டம்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் இலக்கியத் தென்றல் மெல்ல வீசியது உள்ளத்திற்கு இதமாக இருந்தது.
மஇகா-வின் அரசியல் பயணத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதோ இல்லையோ? சொல்லத் தெரியவில்லை; அதனுடைய இலக்கியப் பாட்டையில், குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சியில் மறுமலர்ச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ளது என்பதை துணிந்து கூறலாம். மலேசிய எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து மாதம் ஓர் இலக்கிய விழாவை நடத்தி, அதன்வழி ஒரு தமிழ் நூலை வெளியிடுவது என்று தீர்மானித்து, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு புதிய வசந்த வாசலைத் திறந்திருப்பது பாராட்டிற்குரியது.
செப்டம்பர் 27, புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழா, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
பெற்றோரைப் பேணுதல், இளையோரை நல்வழிப்படுத்துதல், தமிழ்ப் பள்ளி குறித்த விழிப்புணர்வு, தலைவர்களின் பொறுப்பு, குடும்பப் பாங்கு, சமயத் தெளிவில்லாத ஆலயத் தலைவர், ஊரார் நிலத்தில் ஆலயத்தை நாட்டல், ஆன்மிகத் தெளிவு உள்ளிட்ட கருத்துகளை யெல்லாம் பொதிய வைத்து அ. கந்தன் என்னும் பண்பட்ட எழுத்தாளர் படைத்த 22 சிறுகதைகள் இடம்பெற்றுள்ள இந்த நூல், நூலாசிரியரின் சமூகப் பாங்கையும் கற்பனை வளைத்தையும் சுட்டுவதாக தலைமையுரையில் குறிப்பிட்ட சுகாதாரத் துறை அமைச்சருமான சுப்ரா, நூலை வெளியீடும் செய்தார்.
எழுத்தாளர் சங்க செயலாளர் விஜயராணி வழிநடத்திய இந்த விழாவில், அமைச்சகப் பணியை முடித்துக் கொண்டு புத்ராஜெயாவில் இருந்து அமைச்சர் வருவதற்குள் ஆர்.கே.இரமணி கிருஷ்ணன் நூலாய்வுரை வழங்கினார். அவருக்கும் முன்னதாக சுங்கை சோ தேசிய இடைநிலைப் பள்ளி, புக்கிட் செந்தோசா தேசிய இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் நூலைப் பற்றி பேசினர்.
தவிர, இவ்விரு பள்ளிகளையும் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்ட இந்த இலக்கிய நிகழ்ச்சியில், மஇகா தலைவர்களும் அதிகமானோர் கலந்து கொண்டனர். மாறாக, மஇகா உறுப்பினர்கள் அவ்வளவாகத் தென்படவில்லை.
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சி.கி.தேவமணி, உதவித் தலைவர் டத்தோ த. மோகன், கல்வித் துறை துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன், எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், முன்னாள் தலைவர் மன்னர் மன்னன், சமூகவாதி ரெ.கோ.ராசு, மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர் இரா.திருமாவளவன், பொறுப்பாளர் தமிழழகன், கலை இயக்குநர் விஜயசிங்கம், மஇகா உலு சிலாங்கூர் தொகுதித் தலைவர் கு.பாலசுந்தரம், செர்டாங் தொகுதித் தலைவர் டத்தோ இரவி, மஇகா சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவர், காப்பார் தொகுதித் தலைவர், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பெ.மு.அன்பு இதயன், ‘கலைவாணி’ அன்புச்செல்வி, கவிஞர் ப.இராமு, அ.பிரகாஷ் ராவ், ஞான சைமன், எஸ்.ஐ.சத்திய சீலன் உட்பட ஏராளமான பிரமுகர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்ட இந்த இலக்கிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக எஸ்.பி.மணிவாசகம் பங்காற்றினார்.
பாதி நிகழ்ச்சி முடிந்த நிலையில், அமைச்சரின் வருகைக்குப் பின் தமிழ் வணக்கமும் இறை வணக்கமும் இடம் பெற்றன. இலக்கிய நிகழ்ச்சியில் சமயத்தைக் கலக்கும் பாங்கு வழக்கம்போல இடம்பெற, சிறப்புரை ஆற்றிய இராஜேந்திரன் நூலாசிரியர் கந்தனின் சிறப்பை வெகுவாகக் குறிப்பிட்டார்.
எண்பது அகவையிலும் இலக்கியப் படைப்பைக் காணும் கந்தனுக்கு தமிழன்னை துணை நல்கட்டும்.